தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதுமிலிருந்து பாராட்டு குவித்து வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. திரை வரலாற்றில் முக்கியமானதொரு படைப்பாக, உலக சினிமாவை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த படைப்பாக, உருவாகி இருக்கும் “ஒத்த செருப்பு சைஸ் 7” பல்வேறு வகையிலும் சினிமா உலகத்தினருக்கு பாடமாக விளங்கி வருகிறது. மேலும் ஒரு படத்தை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதை இப்படம் மூலம் பாடமாக எடுத்திருக்கிறார் பார்த்திபன். திரையரங்கில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் தற்போது IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது.
தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் பார்த்திபன் இது குறித்து பகிர்ந்து கொண்டது…
தேர்வாளர்களின் அன்பால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அவர்கள் தந்த இந்த அடையாளம் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு உலகளவிலான கதவை திறந்து வைத்துள்ளது. இந்தப்படம் ஒரு மனிதன் மட்டுமே நடித்து இயக்கி தயாரித்த படம். ஒரு புது முயற்சி ஆனால் ஒரு மனிதனின் சாதனையாக அடையாளப்படுத்தப்படும் இப்படத்திற்கு பின்னால் சில பெரும்மனிதர்களின் உழைப்பும் அன்பும் அடங்கியிருக்கிறது.