எண்- 6 – வாத்தியார் கால் பந்தாட்ட குழு – விமர்சனம்
உத்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா, பிரீத்தி சங்கர், உஷா தயாரிக்க,சரத், ஐரா, அருவி மதன் , கஞ்சா கருப்பு, நரேன் , எஸ். இளையராஜா, முத்து வீரா நடிப்பில் ஹரி உத்ரா எழுதி இயக்கி இருக்கும் படம்.
கூலித் தொழிலாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பொழுது போக்காக ஆடி , ஒரு நிலையில் அதையும் மீறி மிகச் சிறப்பாகப் பரிமளிக்கிறார்கள். இதனைப் பார்க்கும் வாத்தியார் என்ற புனைப் பெயர் கொண்ட மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் (அருவி மதன்) அவர்களுக்கு முறைப்படி பயிற்சி கொடுத்து ‘எண் 6 வாத்தியார் கால் பந்தாட்டக் குழு’ என்ற அணியையே உருவாக்கி, மாவட்ட அளவிலான போட்டிகளிலும் ஆட வைத்து , அவர்களில் சிறப்பான சிலரை , தமிழ்நாடு கால்பந்து அணியில் இடம் பெற வைக்க, கால்பந்து கமிட்டிக்கு பரிந்துரை செய்கிறார் .
கர்ணா (சரத்) என்ற இளைஞன் உட்பட சிலர் அப்படி தேர்வாகின்றனர் . ((கர்ணா வுக்கு ஒரு காதலியும் (ஐரா) உண்டு)).
இப்போதுதான் பிரச்னை வருகிறது .
அங்கு மரம் அறுக்கும் தொழில் உட்பட பல தொழில்கள் , தவிர வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் இவை எல்லாம் செய்து வரும்- அரசியல் பலம், ஆதிக்க சாதி பலம், அடியாள் பலம் கொண்ட- தாதா ஒருவர் , அந்த இளைஞர்கள் மாநிலக் கால்பந்து அணியில் ஈடுபடுவதைத் தடுத்துக் கெடுக்கிறார்.
அந்த கால்பந்து வீரர்கள் சிலர் உட்பட, அவர்களது நண்பர்கள் உறவினர்கள் பலர் அவரது தொழிற்கூடங்களில் கூலி வேலை பார்ப்பவர்கள்.
இந்த இளைஞர்கள் கால்பந்தில் புகழ் பெற்று அதைப் பார்த்து மற்றவர்களும் , கால்பந்து, மற்ற விளையாட்டுகள் , படிப்பு இவற்றின் பக்கம் பார்வையைத் திருப்பி விட்டால், வருங்காலத்தில் தனது தொழில்களுக்கு கூலி ஆட்களும் வட்டிக்கு கடன் வாங்கும் ஆட்களும் குறைந்து போவர்கள் என்பதே அதற்குக் காரணம் .
அவரது மிரட்டல் மற்றும் அவர் தரும் அழுத்தம் காரணமாக தகுதி இருந்தும் அந்த இளைஞர்கள் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். கனவுகள் சிதறி அவர்கள் மனம் உடைய , பொங்கி எழும் ஆசிரியர் தாதாவிடம் மோதிச் சாக, அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் .
விளையாட்டில் திறமை இருந்தும் பலர் புறக்கணிக்கப்பட , பிராந்திய , சாதி, மொழி , இன பேதங்கள் காரணம் என்று சொல்லியே கதைகள் வந்திருக்கும் நிலையில் வர்க்க பேதத்தை முன்னிறுத்தி ஒரு கதை யோசித்து இருக்கிறார்கள். சபாஷ். பாராட்டப்பட வேண்டிய விசயம். அருமை.
கிளுகிளுப்பான முதல் காட்சியோடு ஆரம்பித்து படத்தைக் கமர்ஷியலாக கொண்டு போக முயல்கிறார் இயக்குனர்
வினோத் ராஜாவின் ஒளிப்பதிவும் அலிமிர்சாக் இசையும் சில இடங்களில் பாராட்டுப் பெறுகின்றன.
படத்தில் வெற்றிக்கான வழிகள் நிறைய இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது படம் பார்ப்பவர்களை போரடிக்க செய்கிறது.
இந்த குழு வெற்றிக்காக இன்னும் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.