என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்;
– இயக்குனர் ஸ்ரீகார்த்திக்
அம்மா சென்டிமெண்டிற்காக எழுதிய கதை என்றாலும், நான் எழுதும் போதே வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இணைந்தே வந்தது.
அம்மா கதாபாத்திரத்தை குறிப்பிட்டு எழுதாமல், எல்லாருக்கும் பொதுவான கதாபாத்திரமாக இருக்கும்படி தான் அமைத்திருக்கிறேன்.
எனது அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று இரண்டு வருடமாக எழுதினேன், எழுதும்போது அமலா மேடமை யோசித்துத் தான் எழுதினேன். அவரிடம் கதைகூறியதும் கதாபாத்திரத்துடன் இணைந்து விட்டார். எந்த கேள்வியும் கேட்காமல் உடனே ஒப்புக் கொண்டார். 30 வருடங்கள் கழித்து மீண்டும் அமலா மேடம் நடித்திருக்கிறார். இந்த படமும், அவரது கணவர் நாகார்ஜுனன் சார் படமும் ஒரே நாளில் வெளியாவது, எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
இந்த படம் ஆரம்பித்து, முடியும் போது பார்வையாளர்களும் கதையுடன் பயணித்திருப்பார்கள். (Sci-fi) சை – ஃபை ஒருபுறமும், மூன்று நண்பர்களின் வாழ்க்கை ஒருபுறமும் சென்றுக் கொண்டிருக்கும். அந்த இரண்டையும் தனித்தனியாக கூறாமல், இரண்டையும் கலந்து இயக்கியிருக்கிறேன். படம் நன்றாகவும் வந்திருக்கிறது என்றார்.
ரமேஷ் திலக் மற்றும் சதீஷ் இருவரையும் நகைச்சுவை கதாபாத்திரமாக எழுதவில்லை. ஷரவானந்த், ரமேஷ் திலக் மற்றம் சதீஷ் மூவருக்குமே சமமான பாத்திரம், மூவருக்கும் பிரச்சனை இருக்கிறது, அதற்கான தீர்வும் இருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு அவர்களுடன் பயணிக்கு விதமாகத்தான் எழுதியிருக்கிறேன். ஷரவாவின் பாத்திரம், அனைவரையும் சம்பந்தப்படுத்தும். சிலருக்கு உடனே சம்பந்தப்படுத்தும், சிலருக்கு கடந்த காலத்தை சம்பந்தப்படுத்தும், சிலர் எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று நினைக்கும் விதமாக இருக்கும். சில காட்சிகளை டிவியில் பார்ப்பதற்கும், திரையில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கும், அந்த வகையில் இந்த படம் திரையில் பார்க்கும்போது சிறப்பாக இருக்கும் என்றார்.