ஒரு நாள் இரவில் நடக்கும் கதை.
இது ஒரு சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கிறது. எக்ஸிட் என்றால் வெளியேறும் வழி .உயிரைப் பலி கேட்கும் ஓர் ஆபத்தான சூழலில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, கதாநாயகன் எப்படி வெளியேறுகிறான் என்பதுதான் கதை.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாஹீன் இயக்கி உள்ளார்.ப்ளூம் இண்டர்நேஷனல் சார்பில் வேணுகோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் வில்லனாக விஷாக் நாயர் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் மம்முட்டி படத்தில் வில்லனாக நடித்தவர். இந்த விஷாக் நாயர் இதில் ஒரு மிருகமாகவே மாறி நடித்துள்ளார் .
‘ஜெயிலர்’ படத்தில் வரும் விநாயகன் போல,பொதுவாகப் படங்களில் வரும் பாத்திரங்களுக்கு மிருக குணத்தை மட்டும் தான் காட்டுவார்கள்.இப்படத்தில் வரும் வில்லனோ உடல் அசைவுகளிலும் மாறி,ஒரு மிருகத்தைப் போல நான்கு கால்களால்தான் நடப்பார். பேசவே மாட்டார். ஆனால் உணர்ச்சிகள் காட்டுவார்.மனித மாமிசத்தைக் கடித்து உண்ணுவது போன்ற தனது குரூர செயல்களின் மூலம் பதற வைப்பார். அவரது தோற்றமும் உடல் மொழியும் அசல் மிருகத்தை நினைவூட்டிப் பார்ப்பவர்களை மிரட்டும்.
இவர்கள் தவிர ,ரனிஷா ரஹிமான்,ஹரிஷ் பெராடி,வைஷாக் விஜயன்,ஆஸ்லின் ஜோசப், சூரஜ் பாப்ஸ், ஸ்ரீரியாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்குத் திரைக்கதை – அனீஷ் ஜனார்தன் – ஷாஹீன்,கதை – அனீஷ் ஜனார்தன்,ஒளிப்பதிவு – ரியாஸ் நிஜாமுதீன் ,படத்தொகுப்பு – நிஷாத் யூசுப், இசை – தனுஷ் ஹரிகுமார், விமல்ஜித் விஜயன்,ஒலி வடிவமைப்பு – ரெங்கநாத் ரவி,கலை – எம். கோயா,ஆடை வடிவமைப்பு – சரண்யா ஜீபு என சினிமாவின் மீது தாகம் கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணி இணைந்து பணியாற்றியுள்ளது.
தமிழில் திரில்லர் படங்கள் ஏராளம் வந்தாலும் அவற்றில் சில படங்கள் ஜாலி, கேலி என்று தடம் மாறிச் சிரிக்க வைப்பது உண்டு.
ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க சீரியஸாக இருக்கும்.அந்த திகில் மனநிலையைக் கடைசி வரை மாற்றாமல் இருக்கும்.