இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் முதலில் சொல்லனும்னா இயக்குனர் செய்த இரண்டு தவறுகள் .
உயரமாக ஒருத்தர் இருக்கிறார் என அவர போலீசா நடிக்க வைக்கலாம் அப்படின்னு சுந்தர் சி யை நடிக்க வைத்தது முதல் தப்பு, அவரால் சரியாக ஓட முடியல. தயாரிப்பாளர் என்பதால் சற்று சகித்துக் கொள்ளலாம்.

ஒரு கொலை செய்ததாக தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார் ஜெய். இந்நிலையில் திடீரென, தான்தான் தொடர்ச்சியாக பல கொலைகளைச் செய்த ‘பட்டாம்பூச்சி’ என்ற சீரியல் கில்லர் என்கிறார்.குழம்பிய நீதிமன்றம் அவர் தூக்கை நிறுத்தி வைத்து ஜெய்யை விசாரிக்க உத்தரவிடுகிறது. அதற்கான விசாரணையை இன்ஸ்பெக்டரான சுந்தர் சி மேற்கொள்கிறார். ஆனால், ஒரு சிண்ட்ரோம் காரணம் சொல்லி தான் கொலைகளை செய்ய வாய்ப்பில்லை என தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து விடுதலை ஆகிறார் ஜெய்.
இருப்பினும் ஜெய்தான் ‘பட்டாம்பூச்சி’ என உணர்ந்த சுந்தர்.சி அதை நிரூபிக்கப் போராடுகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

ஆனாலும் அவருக்குள் இருக்கும் போலீஸ் புத்தி ஜெய் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வரவே உந்துகிறது. இருப்பினும் சட்டப்படி தண்டிக்க முடியாமல் துறை ரீதியான நடவடிக்கையையும் எதிர்கொண்டு அவர் படும்பாடு பரிதாபம். அதை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார் சுந்தர்.சி
வில்லனாக ஜெய் – அதிலும் கொடூர கொலைகள் செய்யும் வில்லனாக அவரை எப்படித்தான் இயக்குனர் கற்பனை செய்தாரோ தெரியவில்லை. ஒரு ‘சின்ட்ரோம்’ காரணம் சொல்லி கழுத்தையும், கையையும் மடக்கி நீட்டி அவர் ஒரு மேனரிசம் செய்வது நன்றாகவே இருக்கிறது. ஆனால், அதை மருத்துவ ரீதியாக நிரூபித்ததாகத் தெரியவில்லை.
அதேபோல் ஒரு சைக்கோ கொலைகாரன் என்றாலும் அந்த கொலைகளின் பின்னணியில் ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருக்கும். இதில் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. ஜெய் இயல்பாகவே எல்லோருடனும் பழகுகிறார். ஆனால் அவர் எப்படி அத்தனை கொலைகளை கொடூரமாக செய்திருப்பார் என்று புரியவில்லை. உண்மையில் அவர்தான் அந்த கொலைகளை எல்லாம் செய்தாரா என்பதும் கடைசிவரை சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது.

சுந்தர் சி யின் பாசிட்டிவ் எனர்ஜி ஆக இருக்கும் அவரது தந்தை கேரக்டர் நல்ல வார்ப்பு. கடைசியில் அவர் இறந்ததை கூட அறியாமல் சுந்தர்.சி கடமையை நிறைவேற்றுவது நெகிழ்ச்சி.
நவ்நீத் சுந்தரின் இசை படத்தின் ஆரம்பம் முதலே அதிரி புதிரி ஆக ஒலிக்கிறது. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். கதை நடப்பது எண்பதுகளில் என்பதால் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசுவாமியும், கலை இயக்குனர் பிரேம்குமாரும் நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

வழக்கமாக காமெடியில் கலக்கும் இயக்குனர் பத்ரி இந்த முறை படு சீரியசான கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். கூடவே அவர் பிராண்ட் காமெடியும் கொஞ்சம் இருந்திருந்தால் இன்னும் சுவை கூட்டி இருக்கும்.