“பேட்டரி” நிச்சயமாக வெற்றி படம்தான்.- கவிஞர் சினேகன்
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். கவிஞர் சினேகன் பேசும்போது,
சினிமாவில் முக்கியமான மூலதனம், காத்திருப்பும், நம்பிக்கையும். அது இயக்குனர் மணிபாரதியிடம் இருக்கிறது. இந்த மாதிரி படங்கள் வெற்றிபடங்கள் வெற்றியாகும் போது தான் சிறிய படங்கள் எடுப்பவர்களுக்கு ஊக்கமாக அமையும். இதுபோல நிறைய படங்கள் வரவேண்டும் என்றார்.
நடிகர் மாரிமுத்து பேசும்போது,
எனக்கும் மணிபாரதிக்கும் 34 வருட நட்பு. என் தம்பி அம்பத்தூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடன் மணிபாரதியும் வேலை பார்த்தார். அவர் பெயர் நாகை பொன்னி. அன்று முதல் இன்றுவரை போராடிக் கொண்டு தான் இருக்கிறார். சிறுகதை எழுதி கொண்டு இயங்கிக் கொண்டே இருக்கிறார். எனக்கு தெரிந்து மணிபாரதிக்கு இது நான்காவது படம் என்று நினைக்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குனர் பிருந்தா சாரதி பேசும்போது,
இப்படம் வெளியாகி எப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த அரங்கம் உணர்த்துகிறது. பாலுமகேந்திரா மற்றும் பாலசந்தர் அவர்களின் ரசிகர் மணிபாரதி. இன்றும் அவர்களின் மூன்றாம் பிறை மற்றும் அரங்கேற்றம் படங்களைப் பார்த்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதும் நன்றி மறக்காதவர், அன்பானவர். குடும்பத்திற்கு வருமானம் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறோம். என்றாவது ஒருநாள் இயக்குனராகும் போது ஒரே நாளில் வாழ்க்கையே பெரிதாக மாறிவிடும். ஆனால், அதே இயக்குனர் தோல்வியடைந்து விட்டால், உதவி இயக்குனரைவிட மிகவும் மோசமான நிலைக்குச் செல்ல நேரிடும். ஆனால், மணிபாரதி துவழாமல் சின்னத்திரை, வார பத்திரிகை என்று ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
மணிபாரதியை நம்பி இப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. சரண் சார் கூறியதுபோல, இப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். செங்குட்டுவனுக்கு இப்படம் வெற்றி படமாக இருக்கும்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது,
மணிபாரதி சாரைப் பற்றி கூறவேண்டுமானால், நாங்கள் சாலையில் சந்தித்து பேசுவோம், அடிக்கடி போன் செய்து கதை கூறுவார். ஒருநாள் நான் ஒரு படம் இயக்கப் போகிறேன். உங்களுக்கு சிறந்த கதாபாத்திரம் இருக்கிறது. கண்டிப்பாக அழைக்கிறேன் என்றார். அதன்படி அழைத்தார். நானும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று பணியாற்றியிருக்கிறேன் என்றார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பேசும்போது,
மணிபாரதி சாரும், சம்பத் சாரும், பேட்டரி படத்தைப் பற்றி கூறி, வாய்ப்புக் கொடுத்தார்கள். மணிபாரதி சாருடன் பணியாற்றும் போது மிகவும் ஆர்வமாக இருக்கும். இதயப்பூர்வமாக பணியாற்றும் அனுபவம் கிடைக்கும். அம்மு அபிராமி சிறப்பாக நடித்திருக்கிறார் என்றார்.