”ஒத்த கருத்துடைய இருவர் உலகத்தில் இல்லை” என்ற உண்மையை சொல்ல வரும் ‘பியூட்டி’
அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பியூட்டி’. ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் ரிஷி கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக கரீனா ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை தயாரித்திருக்கும் ஆர்.தீபக் குமார் படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இலக்கியன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை தமிழக தலைமை செயலாளர் மற்றும் எழுத்தாளர் வெ.இறையன்பு மற்றும் தமிழ்முருகன் எழுதியுள்ளனர். சங்கர்.கே படத்தொகுப்பு செய்ய, கூல் ஜெயந்த் நடனக் காட்சிகளை வடிமைத்துள்ளார். சண்டைக்காட்சிகளை ஃபயர் கார்த்திக் வடிவமைக்க, கிளாமர் சத்யா பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இயக்குநர் கோ.ஆனந்த், கே.பாக்யராஜின் பாக்யா பத்திரிகையில் பல வருடங்கள் பணியாற்றியதோடு, கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தனது முதல் படத்தை முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இயக்கியிருந்தாலும், சமூகத்திற்கு தேவையான மிக முக்கியமான மெசஜையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்.
இப்படம் குறித்து கூறிய இயக்குநர் கோ.ஆனந்த் சிவா, “முற்றிலும் வித்தியாசமான, எதிர்மறை எண்ணம் கொண்ட ஒருவருடன் நான் பழக நேர்ந்த பொழுது, அவரின் செயல்பாடுகள் என்னைப் பெரிதும் பாதித்தன… அவரிடம் நான் பார்த்த பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து நான் எழுதி, இயக்கியிருக்கும் படம் இந்த ‘பியூட்டி’
”ஒத்தக் கருத்துடைய இருவர் உலகத்தில் இல்லை” என்று சொல்லப்படுவதுண்டு, மதுவில் கூட பலவிதமான மணம், நிறம், சுவை கொண்ட மது வகைகள் இருக்கின்றன… போதைக்காக என்றாலும் அவரவர்களுக்குப் பிடித்தமான மணம், நிறம், சுவையைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள், இது எல்லோருக்குமான பொதுவான ரசனை. என் கதாநாயகனுக்கும் அப்படியொரு விருப்பம் இருக்கிறது. ஆனால், நாயகியின் விருப்பம் முற்றிலும் வேறாக இருக்கிறது. இதனால், அழகான காதலில் சிக்கல்கள் உருவாகி, பெரிதாகி ஆபத்தில் போய் முடிகிறது. அந்த இளம் காதலர்களின் வாழ்க்கை என்னவாகிறது? என்பது சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளுடன் பரபரப்பான பொழுது போக்குப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
கதைக்குப் பொருத்தமான கதாபாத்திரமாய் மாறியிருக்கும் ரிஷியும், அறிமுகமாக இருந்தாலும் கதையின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் நாயகி கரீனா ஷாவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கதைக்கும், கதை நடக்கும் காலகட்டத்துக்கும் ஏற்ப ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆர்.தீபக் குமாரும், பாடல்களுக்கு மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இசையமைப்பாளர் இலக்கியனும் ’பியூட்டி’ யின் வெற்றியில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள்.
‘பியூட்டி’யை பொறுப்புடன் தன் தோளில் தாங்கிக் கொண்டு உலகமெங்கும் கொண்டு சேர்த்துவிடும் உத்வேகத்தோடு பரபரப்பாக இயங்கும் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ஆர்.தீபக் குமார் அவர்களின் முயற்சியால் ’பியூட்டி’ நிச்சயமாக ஒரு வெற்றிப் படமாக அமையும்.” என்றார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வரும் மார்ச் 30 ஆம் தேதி ‘பியூட்டி’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.