‘நாடு’ – விமர்சனம்
எந்த ஒரு அடிப்படை வசதியுமே இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்களின் பிரச்சனையை தோலுரித்துக் காட்டுகிறது இப்படம்.
இந்த படத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசையமைத்துள்ளார்.

கதாநாயகன் தர்ஷன் இந்த படத்தில் தனது 100 சதவீத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வளவு நாள் இந்த நடிப்பை எங்கே ஒளித்து வைத்திருந்தார் என்று கேட்கும் அளவிற்கு சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். ஒரு மலைவாழ் இளைஞனாக வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம். தர்ஷனின் அப்பாவாக ஆர் எஸ் சிவாஜி மற்றும் ஊர் தலைவராக சிங்கம் புலி வழக்கம்போல தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சிங்கம்புலி மகனாக நடித்திருப்பவரும் நன்றாக நடித்துள்ளார், அவரது காமெடிகளும் பல இடங்களில் ஒர்க் ஆகி உள்ளது.
மகிமா மிகவும் இலகுவான மனதுடன் மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்து தரும் மருத்துவராக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்ல முடியாமல், அங்கேயும் இருக்க முடியாமல் தவிக்கும் நிலைமையை சிறப்பாக கையாண்டு எதார்த்தமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். கலெக்டராக வரும் அருள்தாஸ் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் சத்யா.கல்யாண விசேஷங்களில் இனிமேல் இவரது அந்த கல்யாண பாடல் நிச்சயம் ஒலிக்கும்
இயக்குனர் எம் சரவணன் மிகவும் எதார்த்தமான ஒரு படைப்பை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். தமிழ் படங்களில் வழக்கமாக அடுத்து என்ன நடக்கும் என்று நாம் சிந்திக்கும் சில விசயங்களை மாற்றி தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை காட்டி உள்ளார். அதுவே இந்த படத்தின் மூலம், அவருக்கு கிடைத்த வெற்றி.
மருத்துவரை ஊரை விட்டு அனுப்ப கூடாது என்று ஊர் மக்கள் சேர்ந்து செய்யும் சில விஷயங்கள் காமெடியாகவும், அவர்களுது அப்பாவி தனத்தையும் வெளிப்படுத்தியது. இந்த டிஜிட்டல் உலகத்தில் இப்படியும் சில மலை கிராமங்கள் உள்ளதா என்று நம்மை யோசிக்க வைக்கிறது இந்த நாடு. நீட் போன்ற ஒரு முக்கிய பிரச்சனையை தொட்டும் தொடாமலும் பேசி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
ஒரு ஊருக்கு மருத்துவர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே இப்படி ஒரு படைப்பை கொடுத்துள்ளார். அரசாங்கத்தின் மீதும், மருத்துவர்களின் மீது குற்றசாட்டுகளை வைக்காமல் எதார்த்தமாக என்ன நடக்கும் எனபதை திரையில் காண்பித்துள்ளார்.
நாடு படத்தின் அடுத்த ஹீரோ ஒளிப்பதிவாளர் சக்திவேல் தான். தேவநாடு ஊரையும், அந்த இடத்தின் குளிர்ச்சியையும் நமக்கு கடத்துகிறார். பெரிதாக லாஜிக் மிஸ்டேக் இல்லாத இந்த நாடு படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சலிப்பு தட்டுகிறது.