எனைநோக்கிப் பாயும் தோட்டா,கிடாரி போன்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா.தனது முதல் சினிமாவை இயக்கியிருக்கிறார். ‘முதல் நீ முடிவும் நீ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சினிமா ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.90கால கட்டத்தின் பள்ளி நாள்களை இனிமையாக கோர்த்து சினிமாவாக்கியிருக்கிறார் தர்புகா சிவா.விநோத், அனு, கேத்தரின், சைனீஸ், ரிச்சர்ட் இவர்கள் எல்லோரும் இக்கதையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள். ஒரே பள்ளியில் படிக்கும் இவர்களது பள்ளிநாள்கள் நமக்கு திரைவிருந்தாக கிடைக்கிறது. பொதுவாக இதுபோன்ற கதைகளில் புதுமையான காட்சிகள் இடம்பெறுவது கடினம். காரணம் கிட்டத்தட்ட எல்லோருடைய பள்ளி நாள்களிலும் நட்பும் காதலுமே நிறைந்து இருக்கும். முதல் நீ முடிவும் நீ அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் இதுபோல நாஸ்டாலஜி வகை கதைகளை அந்தந்த இயக்குநர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் வீச்சு முடிவாகிறது. அழகி ஒரு ரகம் என்றால் ஆட்டோகிராப் இன்னொரு ரகம்.
இதில் முதல் நீ முடிவும் நீ எங்கு வேறு படுகிறது என்றால். மிகப் பெரிய சோக வயலினை இப்படம் வாசிக்கவில்லை. அதுவே இப்படத்தின் முதல் பலம் ஆறுதலும் கூட. டீ சீரிஸ் கேஸட்டில் பாடல் பதிவு செய்வது. சட்டையில் இங்க் தெளிப்பது. போன்ற எதார்த்த விசயங்களே காட்சிகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. அனு, விநோத் ஜோடி நல்ல தேர்வு. 90களின் அசல் முகமாக அனைவருமே இருக்கிறார்கள். முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள், காட்சிகள் இல்லாமல் மயிலிறகு போல மென்மையாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் தர்புகா சிவா.
இரண்டாம் பாதி நம்மை கொஞ்சம் சோதிக்கிறது. மாணவர் மறுகூடுகை காட்சிகளின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். ரிச்சர்ட், சைனீஸ் போன்ற பாத்திரங்கள் எல்லா வகுப்புகளிலும் உண்டு. அது தர்புகாவின் வகுப்பறையிலும் இருக்கிறது. தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த முறையான பதிவையும் இப்படம் செய்திருக்கிறது. அதற்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் தர்க்க நியாயங்களை விவாதிப்பதில் இப்படம் இன்னுமே தனித்துவம் பெறுகிறது.இன்னிக்கு இருக்கிற இளைஞர்களுக்கு கூட இந்த படத்தை ரொம்பவே பிடிக்கும் அப்படி இயக்கி இருக்கிறார் இசையமைப்பாளர் இயக்குனர் தற்புகா சிவா.பின்னணி இசை மனதை ரம்மியமாக வருடி செல்வதை யாராலும் தடுக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.மொத்தத்தில் ottக்கு ஏற்ற இந்த படம் அருமை.