அகில்பிரபாகர், அஞ்சு ஆகியோர் காதல் இணையர். அவர்கள் ஒரு காட்டுப்பகுதிக்குச் செல்லும்போது கடத்தப்படுகிறார்கள். ஒரு பாதாள அறைக்குள் வைத்து அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.கார்த்திக் முன்னாள் அமைச்சர் ஹரிஷ்பெரேடியின் மகன் என்பதால் காவல்துறை தீவிரமாகத் தேடுகிறது. அந்தக் கடத்தலைச் செய்வது ஜித்தன் ரமேஷ். அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்பதற்கு விடையாக இருக்கிறது படம்.
ஜித்தன் ரமேஷ் என்றால் ஜித்தன் படத்தில் அப்பாவியாக நடித்த முகம்தான் நினைவுக்கு வரும். அதை முற்றிலும் மறக்கச் செய்யும் விதமாக இப்படத்தில் அவர் தோற்றம் அமைந்திருக்கிறது. தோற்றத்திற்கேற்ற முரட்டுத்தனத்தை நடிப்பிலும் காட்டி வியக்க வைத்திருக்கிறார்.அவர் மாற்றத்திற்கான காரணத்தைச் சொல்லும் கதையில் அவரா இவர்? என்று ஆச்சரியப்படுமளவுக்கு வேறு தோற்றம் வேறு நடிப்பு என மாறி நிற்கிறார்.
முன்னாள் அமைச்சர் வேடத்தில் கச்சிதமாக இருக்கிறார் ஹரிஷ்பெரேடி. காவல்துறை அதிகாரியாக வரும் அமர் இராமச்சந்திரன் விறைப்புடன் இருக்கிறார். உடன்வரும் அருவிமதன் நேர்த்தி.
ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம், வனப்பகுதி மற்றும் பாதாள அறைக் காட்சிகளைப் படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார். இசையமைப்பாளர் அவுசப்பச்சன், மிகுந்த அனுபவஸ்தர் என்பதை பாடல் மூலம் காட்டியிருக்கிறார். கதைக்குத் தேவையான அளவு பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார்.
அபிலாஷ் ஜி.தேவன் எழுதி இயக்கியிருக்கிறார். யூகிக்கக்கூடிய கதை என்றாலும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சியமைப்புகளில் வேறுபாடு காட்டி, படத்தை எடுத்துக் கொண்ட பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த ரூட் நம்பர் 17ல் பயணிக்கலாமா என்று கேட்டால் பயணிக்கலாம்.