‘பார்க்கிங்’ – விமர்சனம்
பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர், இளவரசு ஆகியோர் நடித்துள்ள படம் பார்க்கிங்.
சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஸ்ரீநிஷ் தயாரித்துள்ளனர்
அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் முதல் படத்திலேயே நான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். அற்புதமான காட்சி அமைப்புகளுடன், சிறந்த நடிகர் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தப் படத்தை தாங்கி பிடிப்பது படத்தில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர் தான். ஓய்வு பெறப்போகும் ஒரு அரசு ஊழியராக எம் எஸ் பாஸ்கர் மீண்டும் தான் ஒரு எப்பேர்ப்பட்ட நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். எட்டு தோட்டாக்கள் படத்திற்கு பிறகு பார்க்கிங் படத்தின் மூலம் அவருக்கு நிறைய விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறது. நிறைய இடங்களில் டயலாக்குகள் இல்லாமல் தனது கண்களாலேயே நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் அவரின் வயதிற்கும் அனுபவத்திற்கும் உள்ள வேறு எந்த நடிகரை நடிக்க வைத்திருந்தாலும் நன்றாக இருந்திருக்காது எம் எஸ் பாஸ்கருக்கு ஒரு சபாஷ்.
சாக்லேட் பாய் போல படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் சிறிது வில்லனிஷம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோபக்கார இளம் வயது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவரது மனைவியாக வரும் இந்துஜா ஒரு கர்ப்பிணி பெண்ணாக ரசிக்க வைக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம்.
வீடு அலுவலகம் என மொத்தமாக இரண்டு மூன்று இடங்களில் மட்டும் தான் கதை நகர்ந்தாலும் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை. தேவையில்லாத பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் இல்லாமல் கதைக்கு தேவையானதை மட்டுமே வைத்துள்ளார் இயக்குனர் ராம்குமார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் பார்க்கிங்கால் சிரமப்படும் பலருக்கும் இந்த படம் நிச்சயம் கனெக்ட் ஆகும். கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு பார்க்கிங்கால் இந்த அளவிற்கு பிரச்சனை ஏற்படுமா என்றும் யோசிக்க வைக்கும்.
அறுபது வயதிற்கும் 28 வயதிற்கும் உள்ள வித்தியாசத்தை இருவேறாக பிரித்துக் காட்டிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.