‘இறுகப்பற்று’ – விமர்சனம்
‘வைகைப்புயல்’ வடிவேலு நடித்த ‘எலி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “இறுகப்பற்று” (Irugapatru). ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் அடுத்தவர் முகத்தை பார்த்து கூட பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் அனைத்து விதமான உறவுகளிலும் விரிசல் என்பது சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது. இதில் குடும்பங்களில் தம்பதியினர் தொடங்கி காதலிக்கும் இளம் வயதினர் வரையிலானோரை பற்றி சொல்லவே வேண்டாம். இதனால் இருபாலரும் எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் உள்ளம் ரீதியிலான சிக்கல்கள் அதிகம்.
விவாகரத்து, காரணமே இல்லாமல் போடப்படும் சண்டை, எதிர்பார்ப்பை தூண்டி விட்டு பின்பு அது நிராகரிக்கப்படும் போது ஏற்படும் வலி, பிரச்சினை ஏற்பட்டால் அதனை எப்படி தீர்க்க வேண்டும் என அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் இப்படம் பதில் சொல்கிறது.
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த விக்ரம் பிரபுவுக்கு மட்டுமல்லாமல் விதார்த், ஸ்ரீ ஆகிய அனைவருக்கும் இப்படம் கம்பேக் கொடுத்துள்ளது. ஹீரோவுக்கு சற்றும் சளைக்காமல் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன் என 3 ஹீரோயின்களும் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்கள். இந்த படத்தில் 3 தம்பதியினர் இடையே ஏற்படும் பிரச்சினைகளில் அவர்களின் கேரக்டர்களில் நம்மை நாமே பொருந்தி பார்க்க முடிவதால் இயக்குநர் யுவராஜ் தயாளன் உட்பட ஒட்டுமொத்த குழுவும் ஜெயித்துள்ளது.

ஈகோ மட்டும் கணவன் -மனைவி , காதலன் – காதலிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தாது. என்னென்ன காரணங்கள் இங்கு பிரிவுக்கான ஆணிவேராக உள்ளது என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. வசனங்களும் லைக்ஸ் போட வைக்கிறது. விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இடையேயான இடைவேளைக்கு முன்பான உரையாடல் உள்ளிட்ட பல காட்சிகள் ரசித்து கைதட்ட வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் காட்சிகளை கடத்த பயன்படுத்தப்பட்டாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பின்னணி இசையில் வழக்கம்போல மேஜிக் தான்.
அதேசமயம் பெண்கள் மீது தான் தவறு, ஆண்கள் தான் பிரச்சினைக்கு காரணம் என கூறாமல், இரு தரப்பிலும் சரிசமமான பார்வை அணுகப்பட்டுள்ளது.
இறுகப்பற்று படத்தின் மைனஸ் என பார்த்தால் மெதுவாக நகரும் திரைக்கதை தான்.
மற்றபடி இறுகப்பற்று படம் திருமணம் ஆனவர்கள், ஆகப்போகிறவர்கள், காதலிப்பவர்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்ககூடிய சிறந்த படமாகும்..!