மங்கை அரிராஜன் இயக்கிய ” ஒழுக்கம் ” குறும்படம்!
சன் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியுடன் தாய்க்குலத்தால் வரவேற்கப்பட்ட ” மங்கை” மெகாதொடர் உட்பட 23க்கும் மேற்பட்ட மெகாதொடர்களை இயக்கிய மங்கை அரிராஜன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படம்தான் ” ஒழுக்கம்” . இவர் சத்தியராஜ் நடித்த அய்யர் ஐ.பி.எஸ்., சத்தியராஜ் மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்த ” பொள்ளாச்சிமாப்பிள்ளை” நமீதா நடித்த “இளமை ஊஞ்சல்” மற்றும் கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் படங்களை இயக்கி உள்ளார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது, ” போதைப்பொருட்களால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் சரியான கவனத்தை செலுத்தி அவர்களுக்கு நல்லொழுக்கம் சொல்லிதரும் முதல் ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறும்படம்தான் ” ஒழுக்கம்”. இதில் நிழல்கள் ரவி, ஜே. லலிதா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், உமாசங்கர்பாபு, சாரா, சித்ரா, வெங்கய்யா பாலன், முகமது ரபி, கீதா இன்னும் பலர் நடிச்சிருக்காங்க”. என்று கூறினார்.
கஜாதனு இசையையும், பார்த்திபன் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர்.
இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழாவில் சுதந்திர போராட்ட தியாகியும், கம்பூனிஸ்ட் கட்சியின் மூத்த அரசியல்வாதியுமான ஆர்.நல்லகண்ணு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்பு மிரு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திரைப்பட இயக்குனர் எஸ்பி.முத்துராமன் , நடிகரும் திரைப்பட இயக்குனருமான கே.பாக்யராஜ், கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி உட்பட ஏராளமான திரை உலகினர் கலந்துகொண்டனர்.
இயக்குனர் மங்கை அரிராஜன் வரவேற்புரை வழங்க பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும், குறும்படத்தின் தயாரிப்பாளருமான ஜெ. முகமது ரபி நன்றி நவில , நந்தினி விழா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.