‘அவள் பெயர் ரஜினி’ – விமர்சனம்
வினில் ஸ்கரியா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ரெபோ மோனிகா ஜான், அஸ்வின் குமார், கருணாகரன், சைஜூ குரூப், ஷான் ரோமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘அவள் பெயர் ரஜினி’. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்தை காளிதாஸ் ஜெயராம் சொந்தமாக தயாரித்துள்ளார். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசைக்குழு 4 மியூசிக்ஸ் இசையமைத்துள்ளது.
ஆள் அரவமற்ற சாலையில் சைஜூ குரூப் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவத்தை அவரின் மனைவியான நமீதா பிரமோத் மற்றும் சிலர் பார்க்கிறார்கள். இவர்களில் சிலர் கொலையை செய்தது ஒரு பெண் என்றும், சிலர் பேய் என்று சொல்ல காவல்துறை குழம்பி போகிறது. இதனிடையே சைஜூ குரூப் – நமீதா பிரமோத் உறவினரான காளிதாஸ் ஜெயராமுக்கு ஒரு பெண் தன்னை ஃபாலோ செய்வது போல தோன்றுகிறது. அந்த பெண்ணுக்கும் சைஜூ குருப் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதை கண்டறிகிறார். காவல்துறை உதவியுடன் அதனை கண்டிபிடிக்க முயலும் போது பல எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது. இறுதியாக கொலையாளி பெண்ணா? பேயா? , கொலைக்கான காரணம் என்ன? என்பது இப்படத்தின் மீதிக் கதையாகும்.
ஒரு த்ரில்லிங்கான கதையை கையில் எடுத்துக் கொண்ட இப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைத்தும் முடிந்தவரை சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். முதல் பாதி படம் முழுக்க காளிதாஸ் ஜெயராம் வழியாகவே நகர்கிறது. இதில் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாதி வில்லன் கேரக்டர் வாயிலாக கடத்தியிருப்பதில் ஓரளவு மட்டுமே வெற்றி கண்டிருக்கிறார்கள். மற்ற பிரபலங்கள் கதையை நகர்த்துவதற்காக மட்டுமே பயன்பட்டிருக்கிறார்களே தவிர பெரிய அளவில் கதையில் மாற்றம் நிகழ்த்த பயன்படவில்லை. அவள் பெயர் ரஜினி படம் முழுக்க த்ரில்லிங்கான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என இயக்குநர் வினில் ஸ்கரியாவின் மெனக்கெடல் சரியாக வந்திருந்தாலும் திரைக்கதையின் சஸ்பென்ஸ் என்ன என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் காட்சிகளும் மெதுவாக நகர்வது போன்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் இசைக்குழு 4 மியூசிக்ஸின் பின்னணி இசை மிரட்டலாக கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் காட்சிகளும் சில இடங்களில் பயத்தை ஏற்படுத்துகிறது. ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளிப்பதிவும், தீபு ஜோசப்பின் படத்தொகுப்பும் த்ரில்லர் கதையை சிறப்பாக கையாள உதவியிருக்கிறது.
அதேசமயம் பிளாஷ்பேக் கதை, ரஜினி ரசிகர் என சொல்லப்பட்ட விஷயங்கள் கதையுடன் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. முதல் பாதி மிரட்டலாக இருக்கும் நிலையில், இரண்டாம் பாதி வேறு பாதையில் கதையுடன் ஒட்டாமல் பயணிக்கிறது. இதனால் அவள் பெயர் ரஜினி படம் பேய் படம், பழிவாங்கல் படம் என எல்லா வகையிலும் சேர்கிறது.