கொலைக் குற்றவாளி ஜெகதீஷ் (ஜேடி), சிறைச்சாலைக்குள், பூட்டிய சிறைக்கதவுக் கம்பிகளுக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கிறான். 1978ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் 96 கொலைகள் செய்தவன் அவன். கொலையை கலையாகப் பாவிப்பது அவனது ஸ்பெஷாலிட்டி. கொலையுண்ட உடலிலிருந்து பெருகி வழியும் ரத்தத்தைக் கொண்டு, அந்த இடத்திலேயே மாடர்ன் ஓவியம் வரைந்து மகிழ்வது அவனது குணாதிசயம்.
பிரபல எழுத்தாளர் கபிலன் (வினோத் சாகர்), கொலைக் குற்றவாளி ஜெகதீஷுக்கு எதிரே, பூட்டிய சிறைக்கதவுக் கம்பிகளுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார். அவர் மிகவும் தனித்துவமான, திறமையான எழுத்தாளர். அவரது எழுத்து, வாசகர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. அது வாசகர்களை அவரது புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாகவே கற்பனை பண்ணச் செய்துவிடும் ஆற்றல் கொண்டது. அவர் எழுத இருக்கும் அடுத்த புத்தகத்துக்கான கருப்பொருளாக, 25 ஆண்டுகளில் 96 கொலைகள் செய்த மோசமான கொலைக் குற்றவாளி ஜெகதீஷின் வாழ்க்கைக் கதையைத் தேர்வு செய்கிறார். அதை எழுதத் தொடங்குவதற்கு முன்னால், ஜெகதீஷின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், அவனது வாழ்க்கைச் சம்பவங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளவும் விரும்பி, இதோ… சிறைச்சாலையில் அவனை சந்தித்துள்ளார்.
கபிலனுக்கும், ஜெகதீஷுக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடலை ஆழமான வசனங்களாகவும், நுணுக்கமான காட்சிகளாகவும், வாசகர்கள் பாவித்துக்கொள்ளும் கற்பனையினூடாகவும் விவரிப்பது தான் ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்.
படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான கொலைக் குற்றவாளி ஜெகதீஷாக அறிமுக நாயகன் ஜேடி சிறப்பாக நடித்துள்ளார். எனினும் ஜெகதீஷ் கதாபாத்திரம் அவரால் மட்டுமல்ல, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் என பலராலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒவ்வொரு முறையும் ஜெகதீஷ் என்ற ஜேடி, தான் செய்த கொலையைப் பற்றி சொல்லத் தொடங்கும்போது, உண்மையான கொலை தொடர்பான காட்சியில் ஜெகதீஷாக வேறு ஒரு நடிகர் வருகிறார். ஒரு அத்தியாயத்தில் குரு சோமசுந்தரம் என்றால், இன்னொரு அத்தியாயத்தில் ஹரிஷ் உத்தமன். இப்படி ஒரு படத்தில் பல நடிகர்கள் ஒரே கேரக்டரில் நடிப்பதைப் பார்த்து பழக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு இது சுவாரஸ்யமானதாக, ரசிக்கத் தக்கதாக இருக்கும். பழக்கப்படாத பார்வையாளர்களுக்கு இது குழப்பமானதாகவே இருக்கும். இதனால் படத்துடன் அவர்கள் ஒன்ற முடியாமல் போகலாம்.
ஜெகதீஷாக வருபவர்களில் குரு சோமசுந்தரமும், ஹரிஷ் உத்தமனும் அனுபவம் மிக்க நடிப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள். எழுத்தாளர் கபிலனாக வரும் வினோத் சாகர், மாறன் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜான் விஜய், ஜெகதீஷின் மனைவியாக வரும் திவ்யா கணேஷ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி. படத்தின் ஆரம்பத்தில் கதை சொல்லத் தொடங்கும்போதே வித்தியாசமான முறையில் ஆரம்பித்து, இது வழக்கமான படம் அல்ல என்பதை உணர்த்தி, பார்வையாளர்களைத் தயார்படுத்தி விடுகிறார். படம் நகர நகர – கதையும், அது சொல்லப்படும் விதமும் மேலும் மேலும் புதுசாக இருக்கிறது. இயக்குநர் ஓவியர் என்பதாலோ, என்னவோ, ஃபிரேமிங் உள்ளிட்ட மேக்கிங் அம்சங்கள் அனைத்தும் பிரமாதமாகவும், பிரமிப்பூட்டுவதாகவும் உள்ளன.
பிரவின் மற்றும் நந்தாவின் நேர்த்தியான ஒளிப்பதிவும், கே-வின் பொருத்தமான இசையும், அகிலின் தேர்ந்த படத்தொகுப்பும் படத்தின் தரத்தை உயர்த்த உதவியுள்ளன.
மொத்தத்தில் இந்த பயமறியா பிரம்மை படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் புது அனுபவத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும்