பூமர் அங்கிள் – விமர்சனம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு யோகி பாபு படம் முழுவதும் நடித்திருக்கும் படம் பூமர் அங்கிள்.
ஓர் அரண்மனை.அதில் சில மர்மங்கள்,அதற்குள் ஓர் இணையர்,அவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் சில நண்பர்கள் இவர்களை வைத்துக் கொண்டு சிரிக்கச் சிரிக்க ஒரு படம் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் ஸ்வதேஷ்.எம்.எஸ்.
யோகிபாபுவுக்கு இணையராக ஒரு இரஷ்யநாட்டுப் பெண்ணை வைத்திருக்கிறார்கள். நம்ம ஊர் பழக்க வழக்கமெல்லாம் தெரியாமல் அரண்மனை பற்றிய மர்மங்களை ஆராய்கிறார்.
அதேநேரம் யோகிபாபுவின் மீதான கோபத்தால் அவரைத் தாக்க வரும் மறைந்த சேசு, தங்கதுரை,பாலா,ரோபோசங்கர் ஆகியோரும் அந்த அரண்மனைக்குள் வருகிறார்கள்.
யோகிபாபு வழக்கம்போல நடித்திருக்கிறார்.அவரை வைத்து உருவகேலி தொடர்பான வசனங்களை எழுதுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ?
மற்ற நடிகர்கள் அனைவருக்கும் கதையில் கொடுக்கப்பட்ட வேலையைக் காட்டிலும் இரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.அதில் அவர்களுக்குப் பாதிவெற்றி கிடைத்திருக்கிறது.
இதுபோன்ற படங்களில் கவர்ச்சி நடனத்துக்கும் இடமுண்டு என்பதால் ஓவியாவை நடனமாட வைத்திருக்கிறார்கள்.அவரும் இளைஞர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக வஞ்சகமில்லாமல் உழைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுபாஷ்தண்டபாணி,ஒரே இடத்துக்குள் சுற்றுகிறோம் என்கிற எண்ணம் வராதவாறு வண்ணமயமாகக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.
இசையமைப்பாளர்கள் சாந்தன் – தர்ம பிரகாஷ் ஆகியோர் இந்தக்கதைக்கேற்ற பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.பின்னணி இசையிலும் குறைவில்லை.
திரையரங்குக்கு வரும் இரசிகர்கள் நெஞ்சம் நிறையச் சிரிக்கவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்வதேஷ்.எம்.எஸ்.
மொத்தத்தில் இந்த ‘பூமர் அங்கிள்’ படம் குழந்தைகளை கவரும்