‘குரங்கு பெடல்’ – விமர்சனம்
சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமி. பாஸ்கரன் இம்மூவரும் இணைந்து ‘குரங்கு பெடல்’ என்ற குழந்தைகள் படத்தைத் தயாரித்துள்ளார்கள். இயக்குநரும், எழுத்தாளருமான ராசி. அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
1980களின் கோடைக்காலம். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரு சிறு ஊரில் ஐந்து சிறுவர்கள் கோடை விடுமுறையில் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் ஒரு சிறுவன் மட்டும் சைக்கிள் வாங்கிவிட மூன்று சிறுவர்கள் சைக்கிள் வாங்கிய சிறுவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மதுபானக்கடை’ என்ற படத்தை இயக்கியவர் கமலக்கண்ணன். ‘மதுபானக்கடை’ படத்தில் மார்க்ஸியத்தைச் சொன்னவர். ‘குரங்கு பெடலி’ல் டிவி, சமூக ஊடகங்கள், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் என மூழ்கிக் கிடக்கும் இந்த இளம் தலைமுறையினருக்குத் தெரியாத 1980களில் வாழ்ந்த குழந்தைகளின் வாழ்வியல் யதார்த்ததைச் சொல்லி இருக்கிறார். கொங்கு தமிழ், கோடையிலும் வற்றாத பவானி நதி, பரிசல், தோல் பாவை கூத்து என காட்சிக்குக் காட்சி செதுக்கி இருக்கிறார் டைரக்டர். ஒரு சிறு கதாபாத்திரம் கூட நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. உதாரணமாக, தோல் பாவை கலைஞர், காளி வெங்கட்டின் மகளாக நடிப்பவர் போன்றவர்களைச் சொல்லலாம்.
பிரசன்னா பாலசந்தர், ஜென்சன் திவாகர், செல்வா, சாவித்ரி என ‘நக்கலைட்ஸ்’ டீம் இங்கேயும் முத்திரை பதித்து உள்ளது.
‘குரங்கு பெடல்’ படத்தை நடுத்தர வயதினர் பார்த்தால் தங்களது குழந்தை பருவம் நினைவுக்கு வரலாம். இப்போது உள்ள குழந்தைகள் பார்த்தால் இப்படி ஒரு வாழ்க்கை முன்பு இருந்ததா என்று வியப்படைய வைக்கலாம்.
தமிழ்நாட்டின் வெள்ளித்திரைகளில் ரத்தம் தெறித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்பை சொல்லும் படமாக வந்துள்ளது ‘குரங்கு பெடல்.’ தமிழில் நல்ல சினிமா வரவில்லையே என்று வருத்தப்படும் நாம், இது போன்ற நல்ல படங்கள் வெளியாகும் போது வரவேற்கவும் செய்ய வேண்டும்.
இப்படி ஒரு நல்ல படம் உருவாக காரணமாக இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சல்யூட்