‘வெயில்’, ‘அங்காடி தெரு’ படங்களில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைச் சொன்னவர், இந்த தலைமை செயலகத்தில் திரில்லர் அரசியல் களத்தில் அசத்தியிருக்கிறார்.
கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, சந்தான பாரதி, Y.G. மகேந்திரன், விபின், ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தத் தொடரை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். Z 5 ஒரிஜினல் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடருக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
முதல் காட்சியில் ஜார்கண்ட்டில் ஒரு பெண் தன்னைத் துன்புறுத்தும் ஆண்களை வெட்டி வீழ்த்தும்போதே இது வழக்கமான வசந்தபாலன் படமல்ல என்று புரிந்து விடுகிறது. எட்டு எபிசோடுகளைக்கொண்ட இந்தத் தொடர் முதல் எபிசோடில் இருந்து கடைசி வரை கண்ணை அப்படியும், இப்படியும் நகர்த்தவிடாமல் பரபரப்பாக நகர்கிறது. இதுபோன்ற அரசியல் திரில்லர் புதிய அனுபவமாக இருக்கிறது.
பெரும்பாலும் வில்லனாக நடிக்கும் கிஷோர் எப்படி ஒரு பக்குவமான முதல்வராக நடித்திருக்கிறார்? என வியந்து பாராட்டுகிறோம்! ஒரு மூத்த அரசியல்வாதியாகவும், ஒரு குடும்ப தலைவனாகவும் நுண்ணிய உணர்வுகளைக் காட்டி சபாஷ் கிஷோர் எனச் சொல்ல வைக்கிறார்.
என்னைப் பொருத்தவரை, கிஷோர் கேரக்டரைப் பார்க்கும்போது காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி என மூவரின் நினைவும் வருகிறது. கிஷோர் – ஸ்ரேயா ரெட்டி நட்பைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவரும் ஒரு சேர நினைவுக்கு வருகிறார்கள். அரசியல் ஏஜெண்டுகளைப் பார்க்கும்போது மத்தியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைகள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். வாரிசு அரசியல் போட்டியைப் பார்க்கும்போது அட இது தமிழ்நாட்டுக்கு புதுசு இல்லையே என்று சொல்ல வைக்கிறது. ஹெலிகாப்டர் விபத்து காட்சியில், மறைந்த முதல்வர் மனதில் வந்து போகிறார். சந்தான பாரதியை பார்க்கும்போது பேராசிரியர் அன்பழகன் நினைவு வருகிறது.
என்ன வேலை இருந்தாலும் இந்த வெப் தொடரை பார்ப்பதற்கு முன்பு எல்லாம் முடித்துவிட்டு பார்க்கவும் என அந்த வெப் தொடரின் விறுவிறுப்பு மற்ற வேலைகளை மறக்கச் செய்யும்.