BP 180 – விமர்சனம்
ரேடியன்ட் இன்டர்நேஷனல் மூவிஸ் மற்றும் அதுல் இந்தியா மூவிஸ் சார்பில் பிரதிக் டி சத்பர் & அதுல் எம் போசாமியா இணைந்து தயாரித்துள்ள BP180 படத்தை ஜே.பி இயக்கி உள்ளார். ராஜேஷ் தாக்கூர், பரேஷ் ஜக்தா, ஹிரேன் படேல் ஆகியோர் இணைந்து தயாரிக்க உத்ரா புரொடக்ஷன்ஸ் (ஹரி உத்ரா) இந்த படத்தை வெளியிடுகின்றனர். இந்த படத்தில் தன்யா எஸ் ரவிச்சந்திரன், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், அருள்தாஸ், தமிழ், ஸ்வேதாதோரதி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா BP180 படத்திற்கு இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவும், இளையராஜா சேகர் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்
படத்தின் தலைப்பிற்கேற்ப முதல் பாதியில் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இடைவேளைக்கு முன் கதாநாயகி தன்யா பேசும் மாஸ் வசனம் புதுமையாகவும், ரசிக்கும்படியும் உள்ளது. மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி வில்லனாக மிரட்டியுள்ளார். இதுவே அவரின் கடைசி படம் என்பதால், ரசிகர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. MLAவாக வரும் அருள்தாஸ், கமிஷனராக வரும் தமிழ் ஆகியோரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். இரண்டாம் பாதியில் டேனியல் பாலாஜியை கடத்த போடும் திட்டமும் நன்றாக இருந்தது.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு தேவையான பதற்றத்தை கூட்டுகிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், இளையராஜா சேகரின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. இயக்குனர் JP ஒரு பழிவாங்கும் கதையை வித்தியாசமான முறையில் கொடுக்க முயற்சி செய்து, அதில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைந்துவிடுகிறது. சில காட்சிகள் லாஜிக் மீறல்களுடன் அமைந்துள்ளன. பழிவாங்கும் வெறியில் திரியும் வில்லன் ஒரே காட்சியில் திருந்துவது நம்பும்படியாக இல்லை. இந்த திடீர் மாற்றம் படத்திற்கு ஒட்டவில்லை.
அதே போல கமிஷனர் பொது இடத்தில் கொலை செய்யப்படுவது போன்ற சில காட்சிகள் நம்பகத்தன்மையை இழக்கின்றன.
சில குறைகள் இருந்தாலும், டேனியல் பாலாஜியின் மிரட்டலான நடிப்பிற்காகவும், விறுவிறுப்பான முதல் பாதிக்காகவும் ‘பிபி 180’ படத்தை நிச்சயம் பார்க்கலாம்.









