ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளான டோவினோ தாமஸ்..!
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து மாரி 2 படத்தில் நடிச்சதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி, மாயநதி, லூக்கா, வைரஸ், 2018 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுச்சு.
தொடர் வெற்றிகளின் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகராக வலம் வரும் டோவினோ தாமஸின் படத்தின் பெயர் தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், டோவினோ தாமஸின் புதிய படத்துக்கு ‘நடிகர் திலகம்’ என்று பெயர் வைக்கப்பட்டதுதான் காரணம்.
மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் ‘நடிகர் திலகம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல வில்லன் நடிகர் லால் மகன் ஜீன் பால் லால் டைரக்ட் செய்யறார்.
இந்தப் படம் அரசியலுக்கு வர விரும்பும் நடிகரை மையமாகக் கொண்ட நகைச்சுவையான படம் என்று கூறப்படுது.
அப்படியான படத்துக்கு நடிகர் திலகம் என பெயர் வைப்பது சிவாஜி கணேசனை அவமதிப்பதாக உள்ளது என்றும் பெயரை மாற்றவேண்டும் என்றும் வற்புறுத்தி சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சந்திரசேகரன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் மனு அளிச்சார். சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்த படத்தின் பெயர் ‘நடிகர்’ என மாற்றப்பட்டு உள்ளது. இந்த படத்தின் புதிய டைட்டிலை நடிகர் பிரபு கொச்சியில் நடைபெற்ற டைட்டில் அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டு வெளியிட்டார். அப்போது படத்தின் பெயரை மாற்றியதற்காக படக்குழுவுக்கு அவர் நன்றி தெரிவிச்சுக்கிட்டார்.