சிவகார்த்திகேயன் புரொடக்ஷனின் அடுத்த தயாரிப்பாக நெஞ்சை நெகிழ வைக்கும் படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’!
நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்.
இயக்குநர் கமலக்கண்ணன் படம் உருவாக்குவதில் தனது புதுமையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான பாணிக்காக பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘மதுபானக்கடை’, ’வட்டம்’ போன்ற படங்கள் மதிப்புமிக்க பல விருதுகளை பெற்றிருக்கிறது. கடந்த 2012 இல், அரவிந்தன் புரஸ்காரத்தில் சிறப்புக் குறிப்புடன் சிறந்த அறிமுக இயக்குநராக அங்கீகரிக்கப்பட்டார் கமலக்கண்ணன். அடுத்த ஆண்டே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த தயாரிப்பாளர் என்ற பட்டத்தைப் பெற்றார். கோயம்புத்தூர் ரோட்டரி சங்கத்தின் மதிப்பிற்குரிய சிறந்த சமூக விருதையும் 2009 ஆம் ஆண்டில் பெற்றார். சினிமா கலைக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்கான அவரது பங்களிப்புகள் அனைத்தும் மதிக்கப்படக்கூடியவை.
சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர், ரத்தீஷ் மற்றும் சாய் கணேஷ் ஆகியோர் இந்த தலைசிறந்த படைப்பில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபம் கொண்ட புகழ்பெற்ற குழந்தைகள் நிபுணர் நந்தகுமார் இந்த இளம் திறமையாளர்களுக்கு 45 நாட்கள் நுட்பமாக நடிப்பு பயிற்சி அளித்தார். இவர்களுடன் திறமையான நடிகர் காளி வெங்கட் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நக்கலைட்ஸ் பிரசன்னா பாலச்சந்தர் மற்றும் ஜென்சன் திவாகர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் அதிசயம் என்று பல துறை வல்லுநர்கள் கணிக்கும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனும், கலை அரசனும் இணைந்து தயாரித்துள்ளனர்.