தயாரிப்பாளர் அஸ்வினி தத் அறிமுகப்படுத்திய பிரபாஸின் ‘கல்கி 2898 AD ‘ பட முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் கலந்துகொண்டு வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் ‘கல்கி 2898 ஏ டி ‘ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ” இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஜூன் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில்,” இந்த உலகத்தின் முதல் நகரம் என்றும் கடைசி நகரம் என்றும் காசி குறிப்பிடப்படுவது… குடிநீர் பிரச்சனை.. உலகத்தின் ஒரே கடவுளாக சுப்ரீம் யஸ்கின்… 6000 வருடத்திற்கு பிறகு ஒளிரும் சக்தி… அதைக் காக்க போராடும் அஸ்வத்தாமா.. சிருஷ்டியின் ஜனனம்… இதை தடுக்க நினைக்கும் கும்பல் … புஜ்ஜி என்ற வாகனத்துடன் அவர்களுடன் இணையும் பைரவா.. இருவருக்கும் இடையே நடைபெறும் போர்… பிறக்காத உயிருக்காக ஏன் இந்த இத்தனை அழிவு என எழுப்பப்படும் வினா… புதிய பிரபஞ்சம் உருவாகவிருக்கிறது என்ற முத்தாய்ப்பான வசனத்துடன் முன்னோட்டம் நிறைவடைகிறது.
ரசிகர்களுக்கு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புஜ்ஜி எனும் வாகனம் திரையில் நிகழ்த்தும் மாயாஜாலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. பிரபாஸின் ஸ்டைலான தோற்றமும் .. ஆக்சன் பாணியிலான வசனங்களும்.. இது பிரபாஸின் படம் என்பதை அவரின் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில் தயாராகி இருக்கிறது.
சுவாரசியமான கற்பனை கதை – சர்வதேச தரத்திலான படமாக்கம் – மாஸான காட்சிகள் – கண்களை இமைக்க மறக்கடிக்கச் செய்யும் அற்புதமான வி எஃப் எக்ஸ் காட்சிகள்- நட்சத்திர கலைஞர்களின் நேர்த்தியான மற்றும் வித்தியாசமான திரைத்தோன்றல் – மயக்கும் பின்னணி இசை… என ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
அற்புதமான திரையரங்க அனுபவத்தை பெறுவதற்காக காத்திருக்கும் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ‘கல்கி 2898 ஏ டி ‘ படம் உருவாகி இருக்கிறது.