வெப்பம் குளிர் மழை – விமர்சனம்
நம் நாட்டில் குழந்தை இல்லாத தம்பதிகள் உடல் ரீதியாக மட்டுமில்லாமல் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். வசை சொற்கள், ஏளனப் பேச்சுக்கள் இவர்களை நோக்கி முன்வைக்கப்படுகின்றன. இது போன்ற குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லும் படம்தான், ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படம். ஹாஸ்டக் f d f s நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. பாஸ்கல் வேதமுத்து இப்படத்தை இயக்கி உள்ளார்.
இப்படி ஒரு சென்சிட்டிவான கருத்தை எடுத்து சரியான நடிகர்களை தேர்வு செய்து படத்தை எடுத்ததற்காக பாராட்டலாம். குழந்தை இல்லாத பிரச்னை என்ற ஒரு விஷயத்தை மையப்படுத்தியே படம் நகர்கிறது. எங்கேயும் ஒரு தேவையற்ற காட்சிகள் கூட படத்தில் இல்லை. இவ்வளவு அறிவியல் வளர்ந்த பின்பும் குழந்தை இல்லாத பிரச்னைக்கு பெண் மட்டுமே காரணம் என்று நம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் கிராமத்தில் அதிகம் என்று எந்தவித சமரசமும் இல்லாமல் சொல்கிறார் இயக்குநர். மலடி என்ற வார்த்தையே பெண்மையை அவமதிக்கும் சொல் என்பதை மறந்து விடுகிறோம். குழந்தையின்மை விஷயத்தில் ஆணாதிக்கம் எவ்வாறு நுழைகிறது என்பதும் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் படத்தில் டீடைலிங் என்ற விஷயம் சில இடங்களில் குறைவாக உள்ளது. ரசிகர்கள் புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள் என்று இயக்குநர் அப்படியே விட்டு விட்டார் போல. சங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் கிராமத்தை கண் முன் காட்டுகிறது.
த்ரவ் முதல் படமே என்று தெரியாத அளவிற்கு ஒரு ஆணாதிக்கம் கொண்ட கணவனாகவும், ஒரு தாழ்வு மனப்பான்மை கொண்ட மனிதனாகவும் நல்ல நடிப்பை தந்துள்ளார். என் உயிர் தோழன் ரமாவின் நடிப்பை பார்க்கும்போது, ‘போதும் இந்தப் பெண்ணை டார்ச்சர் பண்றதை நிறுத்துங்கள்’ என்று நாமே சொல்லும் அளவுக்கு உள்ளது.