கே.ஜி.எஃப் 1 மற்றும் கே.ஜி.எஃப் 2ஆம் பாகங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். இவரின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படமே சலார்.
ஆனால் முதல் பாகத்தின் பெரும்பாலான காட்சிகள் பிரபாஸ்க்கு பில்டப் காட்சிகள்தான் இருந்தது.. இல்லை.. இல்லை.. ஓவர் பில்டப் காட்சிகள்தான் இடம் பெற்றிருக்கின்றது. படத்திற்கு தாமதமாகச் சென்றால் கூட படம் புரியவில்லை என ரசிகர்கள் பயப்படத் தேவையில்லை. எவ்வளவு தாமதமாகச் செல்லலாம் எனக் கேட்டால், படத்தின் இன்ட்ரவெலுக்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக சென்றால் போதும். பிருத்விராஜ் அறிமுகமான பின்னர்தான் படம் மீண்டும் கதைக்குள் செல்வதைப் போல் உள்ளது. ஆனால் இடைவெளி காட்சியின்போது பிருத்விராஜுக்கும் பிரபாஸூக்கும் இடையில் பெரும் பகை இருப்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. இந்த பகை ஏன் வந்தது என இரண்டாம் பாதியில் விளக்குகின்றது படம். சண்டைக்காட்சிகளால் நிரம்பிய இந்த படம் ஆக்ஷன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்துதான்.
படத்தில் அவ்வப்போது காண்பிக்கப்படும் பாசக்காட்சிகள் எடுபடவில்லை. இந்த படத்தில் பாடல் இல்லாததும் படத்திற்கு ஒரு நல்ல பலம். க்ளைமேக்ஸில் அடுத்த பாகத்திற்கான லீட் வைத்து முடித்துள்ள ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ரசிகர்கள் தள்ளப்படுகின்றனர். கத்தியை வைத்து வித்தை காட்டிவரும் பிரபாஸை ஏன் யாருமே துப்பாக்கியால் சுடவில்லை என்ற கேள்விய திரையரங்கின் எல்லா மூலைகளில் இருந்தும் ரசிகர்கள் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
படத்தின் பலவீனம் என்றால் அது பிரபாஸ்க்கு கொடுக்கப்பட்ட பில்டப் காட்சிகள்தான். எக்கச்சக்க லாஜிக் கேள்விகளும் எழாமல் இல்லை. இதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே அறிமுகப்படுத்திய காதாப்பாத்திரங்களுக்கு தேவையில்லாத ஷாட்களை வைத்தும் படத்தின் நீளத்தினை ஜவ்வு போல் இழுத்துள்ளனர். எதிரிகள் பிரபாஸைப் பார்த்து முதல் பாதியில் பயப்படும் காட்சிகள் ரசிகர்களின் மனதைத் தொடுமா என்பது கேள்விக்குறிதான்.
படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும், பிரபாஸ் பில்டப் காட்சிகளுக்கு வரும் தீம் மியூசிக் சுத்தமாக எடுபடவில்லை. ஒரு சில காட்சிகள் கே.ஜி.எஃப் படத்தினை நியாபகப்படுத்தினால் ஒரு சில காட்சிகள் பாகுபலியை நினைவூட்டுகின்றது. பில்டப் காட்சிகளை மட்டும் குறைத்திருந்தால் சலார் திருப்தி அளிக்கும் ஆக்ஷன் படமாக இருந்திருக்கும்.