’காரி’ – விமர்சனம்
சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
காரி திரைப்படத்தில் சசிகுமார், அறிமுக நாயகி பார்வதி, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில், புதுமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியுள்ள திரைப்படம் காரி. சர்தார் திரைப்படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
நம்பிக்கை இருந்தால் எதுவும் நடக்கும், காரணம் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை என்ற ஒற்றை வரி கதைக்கு பின்னால், ஏராளமான சம்பவங்களையும், சின்ன சின்ன கருத்துக்களையும் இணைத்து காரி திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கிடையே கோயிலை யாருக்கு நிர்வகிப்பது என்ற போட்டி வருகிறது. அதை ஜல்லிக்கட்டு நடத்தி முடிவு செய்வது என தீர்மானிக்கின்றனர். ஆனால் பல வருடங்களுக்கு முன் ஊரை விட்டு சென்ற சசிகுமாரின் குடும்பம் வந்தால்தான் அந்த ஜல்லிக்கட்டை நடத்த முடியும். அவர் வந்தாரா? கோயில் யாருக்கு சென்றது? இதற்கிடையே சின்ன அரசியல் என காட்சிகளை அடுத்தடுத்து நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஹேமந்த்.
சென்னையில் குதிரை ஜாக்கியாக இருக்கும் சசிகுமார், வழக்கம் போல் நண்பனுக்காக போட்டியில் தோற்கிறார். ஆனால் நண்பன் தவறானவன் என்பது தெரிய வருகிறது. மேலும் தந்தையும் இறந்துவிடுகிறார். இந்த சமயத்தில் தன்னுடைய பூர்வீக கிராமத்திற்கு திரும்புகிறார் சசிகுமார்.
அதன்பின் நாயகியின் மீது காதல், அவருக்காக வில்லனிடம் இருந்து காரி என்ற காளையை மீட்பது. அதன் மூலம் சில சிக்கல் ஊர் பிரச்னையுடன் தொடர்படுகிறது என காட்சிகள் நகர்கின்றன.
இந்தப் படத்தின் இயக்குனர் ஹேமந்த், தனக்கு தெரிந்த ஏராளமான விஷயங்களை, கதையோட்டத்துடனும், வசனத்திலும் புகுத்தியுள்ளார். அதேசமயம் அது வழுக்கட்டாயமாக சொன்னது போல் இருக்க கூடாது என்பதிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
இந்தப் படத்தின் வில்லன் ஜே.டி.சக்ரவர்த்தியுன் கதாபாத்திரம் ஒரு வித நாடக தன்மையுடன் இருக்கிறது. அதுவும் காளை விந்துகளை ஏற்றுமதி செய்துவிட்டு அந்த காளையை கரியாக்கி சாப்பிடுவது என்பது அவரின் குணமா அல்லது மன நோய்யா என தோன்ற வைக்கிறது. அதேசமயம் வில்லன் கதாபாத்திரத்திம் பார்ப்பவர்களுக்கு வெறுப்போ கோபமோ ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக என்னடா இது என்றே தோன்ற வைக்கிறது.
காரி படத்தின் திரைக்கதை அடுத்தடு நகர்ந்து கொண்டே செல்கிறது. அது ஓகேவாக தோன்றுகிறது. இருந்தாலும் அதில் ஒரு அழுத்தமான பிடிப்பு இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால் படத்தில் இடம்பெறும் காட்சிகள் பெரிதாக சலிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும் பெரும்பாலான வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
காரி திரைப்படத்தில் சசிகுமார் கச்சிதமாக நடித்துள்ளார். அவரை போலவே அறிமுக நாயகி பார்வதியும் விட்டுகொடுக்காமல் நடித்துள்ளார். இவர்கள் இருவரை தவிர, இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
முள் காடுகளையும் வறண்ட நிலத்தையும் அதிகம் கொண்ட, இராமநாதபுரத்தை மையமாக வைத்து தமிழில் சில படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப் படத்தில் அந்த மாவட்டம் வித்தியாசமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியையும் நேர்த்தியாக படமாக்கியுள்ளனர். அதற்கு ஒளிப்பதிவு முக்கிய பங்காற்றியுள்ளது. அதேபோல் படத்திற்கு டி.இமான் இசை பொருந்தி நிற்கிறது. குறிப்பாக பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்கிறது.
நம்முடைய கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றிற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. அது நம்பிக்கை என்ற பெயரின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது என்று முடிகிறது காரி. சசிகுமார் நடிப்பில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. ஆனால் காரி அந்தப் பட்டியலில் இணையாது.