மிகப்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் மாஸ்டர் சில்வா முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் “சித்திரைச் செவ்வானம்”. இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜா கண்ணன் (நடிகை சாய் பல்லவியின் சகோதரி), மானஸ்வி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கதைப்படி,
நாயகன் சமுத்திரக்கனி தனது கிராமத்தில் விவசாயம் செய்து பிழைப்பை நடத்தி வருபவர். இவரது மனைவி வித்யா பிரதீப். இவர்களது மகள் மானஸ்வி. ஒருநாள் மோட்டாரை அனைப்பதற்காக செல்லும் வித்யா, மின்சாரம் பாய்ந்து தூக்கியெறிப்படுகிறார். கிராமத்தில் போதுமான மருத்துவ வசதியோ,மருத்துவரோ இல்லாத நிலையில் மருத்துவரை அழைக்க பக்கத்து ஊருக்குச் செல்கிறார். ஆனால், சமுத்திரக்கனி வருவதற்குள் வித்யா இறந்து விடுகிறார்.
இனி உலகமே இவள் தான் என தனது மகளுக்காக வாழ்கிறார். ஒரு மருத்துவர் இல்லாத காரணத்தால் தான் தன் மனைவியை இழந்தோம் என்று மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்கிறார்.
மானஸ்வி வளர்ந்து பூஜா கண்ணனாக நிற்கிறார். உயர்நிலைப்பள்ளியில் நல்லதொரு மதிப்பெண்ணை பெறுகிறார். அடுத்தென்ன.? “நீட்” எழுத வேண்டுமே.!? அதற்காக பக்கத்து ஊரில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் நீட் பயிற்சி வகுப்பில் பூஜா கண்ணனை சேர்த்து விடுகிறார் சமுத்திரக்கனி.
அங்கு விடுதியில் சேர்ந்து படிக்கிறார் பூஜா கண்ணன். ஒருநாள் சமுத்திரக்கனி வீட்டிற்குச் சென்ற போலீஸார் பூஜா கண்ணனை விடுதியில் காணவில்லை என்று கூறுகின்றனர்.
அவர் குளியலறையில் குளிக்கும் வீடியோ ஒன்று இணயத்தில் பரவி வருகிறது என்றும், அந்த வீடியோ வெளியானது முதல் பூஜா கண்ணனை காணவில்லை என்றும் போலீஸார் சமுத்திரக்கனியிடம் கூறுகின்றனர்.
இதனால், உடைந்து போகும் சமுத்திரக்கனி தனது மகளைத் தேடி அலைகிறார். அந்த வீடியோவை எடுத்தது யார் என்ற தேடலிலும் சமுத்திரக்கனி ஈடுபடுகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சமுத்திரக்கனி படத்தின் மொத்தக் கதையை தனது தோளில் சுமந்து சென்றிருக்கிறார். தனது முதிர் வயது கதாபாத்திரத்தை முதிர்ந்த அனுபவத்தால் “நச்” என செய்து முடித்திருக்கிறார். தனது உலகமே மகள் என நினைத்து வாழும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாகவும் வலிமையானதாகவும் இருந்தது. பல இடங்களில் மகளுக்காக அழும் காட்சிகளில் நம்மையும் அழ வைத்து விடுகிறார் சமுத்திரக்கனி.
அம்மா இறந்துவிட்டதை அறிந்து மானஸ்வி கதறி அழும் காட்சிக்கு யாரும் அழாமல் இருக்க முடியாது. அந்த இடத்தில் அப்படியொரு நடிப்பைகொடுத்து அனைவரையும் கவர்கிறார் மான்ஸ்வி.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ரீமா கல்லிங்கள், இக்கதைக்கு சரியான தேர்வு தான். தனது கண்களால் மிடுக்கான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவ்வப்போது காட்சிகளில் இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் அட்வைஸ் செய்திருக்கிறார்.
அபாரமான நடிப்பை கொண்டு வந்திருக்கிறார் பூஜா கண்ணன்., தனது முதல் படம் என்பது போல் அல்லாமல் பல படங்களில் நடித்தவர் போன்ற அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார் பூஜா. விடுதியில் சமுத்திரக்கனி பூஜாவை விட்டுச் செல்லும் காட்சியில் மெய் சிலிர்க்க வைத்துவிட்டனர்.
க்ளைமாக்ஸில் தனது அப்பாவோடு சைக்கிளில் அழுது கொண்டே செல்லும் காட்சியாக இருக்கட்டும், வீடியோ எடுத்தவர்களிடம் கெஞ்சி அழும் காட்சியாக இருக்கட்டும் தனக்கான ஒரு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார் பூஜா.
நிச்சயம் தென்னிந்திய சினிமாவில் சில வருடங்களில் ஒரு ரவுண்ட் வருவார் பூஜா கண்ணன்.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மூன்று இளைஞர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜீவா பாலசந்தரின் நடிப்பு எதார்த்தமானது. படத்தின் மிகப்பெரும் பலம் பின்னனி இசை. சாம் சி எஸ் அவர்களின் பின்னனி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. ஒரு சில காட்சியில் மாஸான இசையை சற்று தவிர்த்திருக்கலாம்.
பாடலும் ஹிட் லிஸ்டில் சேர்ந்துவிட்டது. கிராமத்து அழகையும்,ஒரு வாழ்வியலின் ஓட்டத்தையும் கண்முன்னே நிறுத்தியதில் ஒளிப்பதிவின் பங்கு அளப்பறியது. ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் மற்றும் வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
படத்தொகுப்பில் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
கதை வலுவானதாக இருந்தாலும், க்ளைமாக்ஸில் சொல்லப்பட்ட முடிவுகள் ஏற்கும்படியாக இல்லாதது சற்று மன நெருடல். அதுமட்டுமல்லாமல், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வலி.. வலி.. வலி.. என பார்க்கும் கண்களிலும் வலி, மனதிலும் வலி என ஒரே லைனாக செல்வதால் இரண்டாம் பாதி மனதோடு ஒட்டாமல் நிற்கிறது.
ஒரு அறிமுக இயக்குனராக மாஸ்டர் சில்வா வெற்றி பெற்றுவிட்டார். இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் கூடுதலான ஈர்ப்பை “சித்திரைச் செவ்வானம்” பெற்றிருக்கும்.
சித்திரைச் செவ்வானம் – வலி குறைத்து, வாழ வழி கொடுத்திருக்கலாம்..