‘பத்துதல’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் டீசரும் திரையிடப்பட்டது.
இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, “இந்தப் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் இருந்தது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. படம் வெளியானாலும் அது எப்படியான வெற்றியாக அமையும் என்ற கம்பேரிசன் பயமாக உள்ளது. இது ரீமேக் கிடையாது. தழுவல்தான். 90% வேறாக கொடுத்திருக்கிறேன். இரண்டு மூன்று காட்சிகள் மட்டும்தான் ஒன்றாக இருக்கும். சிலம்பரசன் சிறப்பாக நடித்துள்ளார். கெளதம் மேனன், கெளதம் கார்த்திக், ரெடின் கிங்ஸ்லி, கலையரசன், டிஜே அனைவருமே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் சார் சிறந்த இசையை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஃபரூக், எடிட்டர் பிரவீன் என இவர்கள் எனக்கு பக்கபலம். எஸ்.டி.ஆர். படம் என்றாலே வசனம் தான் முக்கியாமனது. அது சிறப்பாக வந்துள்ளது. படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் உள்ளது. இதில் சாயிஷா ஆர்யா எக்ஸ்க்ளூசிவ்வான டான்ஸ் கொடுத்துள்ளார். அதற்கான படப்பிடிப்பு இப்போது போய்க் கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் ஈஸ்வர் பேசியதாவது, “இந்தப் படத்தை கன்னடத்தில் நான் பார்த்தபோது சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். கடைசியில் அவரே எங்கள் படத்தில் கிடைத்தது மகிழ்ச்சி. அவரது வளர்ச்சியில் எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே சிறந்த பணியைக் கொடுத்துள்ளனர். ரஹ்மான் சாரும் அவரது மகனும் கொடுத்துள்ள வீடியோ ரசிகர்களைப் போலவே எனக்கும் பிடித்திருந்தது. நாம் ஆதரிக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் என இவர்களைத் தாண்டி சாயிஷா ஆர்யா அவராகவே வந்து எங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். கன்னடத்தில் உள்ள ‘மஃப்டி’ படத்தின் காப்பி இல்லை, எங்களது சொந்தப் படம் என்றால் நம்பும்படிதான் ‘பத்துதல’ எடுத்திருக்கிறார்கள். ரஹ்மான் சார் ஒரு திறமையுள்ள குழந்தை. கிருஷ்ணா சாரின் திறமைக்கு இன்னும் பல படங்கள் கிடைக்க வேண்டும்” என்றார்.

படத்தின் மிகப்பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. படத்தின் அனைத்து பாடல்களும் பல நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளதையும் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தனர். ஏ.ஆர். ரஹ்மான் லைவ்வாக பாடல்களை மேடையில் பாட உள்ளார்.
கூல் சுரேஷ் பேசியதாவது, “என்னிடம் ஏன் மற்ற நடிகர்களின் படங்களுக்கு புரோமோஷனுக்கு வருவதில்லை எனக் கேட்டனர். நான் சிம்புவின் தீவிர பக்தன். இந்தப் படத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து பூ தூவி புரோமோஷன் செய்ய வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். அதற்கான அனுமதி வாங்கும் வேலைகள் நடந்து வருகிறது” என்றார்.