’தலைநகரம் 2’ மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்! Jaise Jose
முதல் படத்திலேயே மூன்று கெட்டப்புகள்! – ‘தலைநகரம் 2’ மூலம் கோலிவுட்டில் கால் பதித்த பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்
லால், நெடுமுடி வேணு, மனோஜ் கே.ஜெயன், திலகன், சுரேஷ் கோபி, கலாபவன் மணி, ராஜன் பி.தேவ் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் வரிசையில், மேலும் ஒரு பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘திரி டாட்ஸ்’ (3 Dots) படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமான ஜெய்ஸி ஜோஸ், தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராக உயர்ந்தார்.
‘லூசிஃபர்’, ‘காபா’, ‘நாயட்டு’, ‘ஆபரேஷன் ஜாவா’ உள்ளிட்ட சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெய்ஸி ஜோஸ், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘2018’, ‘கொரோனா பேப்பர்ஸ்’ ஆகிய படங்களில் தனது நடிப்பு மூலம் வெகுவாக பாராட்டப்பட்டார்.
மேலும், பல மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜெய்ஸி ஜோஸ், சுந்தர்.சி நடிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘தலைநகரம் 2’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
சென்னையை மையப்படுத்திய கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தலைநகரம் 2’ படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு வில்லன் நடிகராகவும், வித்தியாசமான அதே சமயம் இயல்பாக நடிக்க கூடிய நடிகரை தேடி வந்த இயக்குநர் வி.இசட்.துரை, மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸின் மாலையாளப் படங்களை பார்த்து அவரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே மூன்று கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருக்கும் ஜெய்ஸி ஜோஸ், வில்லன் கதாபாத்திரத்தை கையாண்ட விதத்தை பார்த்து சுந்தர்.சி அவருடைய அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறாராம்.
ஒரே வேடமாக இருந்தாலும், மூன்று வடிவங்கள் கொண்ட அந்த வேடத்தில் மூன்று விதமாக நடித்திருக்கும் ஜெய்ஸி ஜோஸ், ‘தலைநகரம் 2’ படம் தமிழ் சினிமாவில் தனக்கு பெரிய அடையாளத்தை கொடுக்கும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘தலைநகரம் 2’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் ‘ரெபல்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெய்ஸி ஜோஸ், மேலும் பல தமிழ்ப் படங்களில் நடிக்கவுள்ளார்!