விளையாட்டுத்துறையில் சூப்பர் ஸ்டார்களை தேடுங்கள் – உலக சாதனை படைத்த ஸ்கேட்டிங் வீராங்கனை ஏ.ஜே.ரபியா சக்கியா வேண்டுகோள்
”ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா” என்று பாரதியார் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எழுதிய கவிதை, இன்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விளையாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.
படிப்பு மட்டும் ஒருவர் முன்னேற்றத்திற்கு போதாது, அவற்றுடன் கூடுதல் திறன் வேண்டும், அதிலும் விளையாட்டு திறன் என்பது மிக மிக முக்கியம், என்பதை தற்போதைய காலக்கட்டம் நிரூபித்து வருகிறது. இத்தகைய காலக்கட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள், வெற்றி, தோல்விகளை தாண்டி, சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகிறார்கள்.
அந்த வகையில், சென்னையை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, தனிநபர் ஸ்கேட்டிங் விளையாட்டில், அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 44 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 48 நிமிடங்களுக்குள் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.
இந்த சாதனை நிகழ்ச்சி இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அருகே உள்ள வயலூர் சாலையில் நடைபெற்றது. காலநிலை பெரிதும் சவாலாக இருந்த நிலையிலும், மாணவி ரபியா விடா முயற்சி செய்து இத்தகைய கடினமான சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
சாதனை நிகழ்வுக்கு முடிந்த பிறகு மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியாவின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 10 மணியளவில் மெரீனா கடற்கரை அருகே உள்ள வெல்லிங்டன் மகளிர் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜே.எச்.எம். ஹசன் மெளலானா மற்றும் திமுக வட சென்னை மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு மாணவிக்கு ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலை மற்றும் கிரீடத்தை அணிவித்து பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, “மெரினா கடற்கரைக்கு சென்ற போது சிறுவர்கள் ஸ்கேட்டிங் செய்ததை பார்த்து எனக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது. பிறகு என் விருப்பத்தை கேட்ட என் பெற்றோர் என்னை ஸ்கேட்டிங் வகுப்புக்கு அனுப்பினார்கள். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் என் பயிற்சியாளர் டோனா சதிஷ் ராஜா பயிற்சி ஆகியவற்றின் மீது ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி பல பயிற்சிகளை நானே கேட்டு கற்றுக்கொண்டு, பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு சாதனை படைத்திருக்கிறேன். இருந்தாலும், இதில் உலக சாதனை செய்ய வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. என் கனவை நினைவாக்க நான் கடுமையாக போராடியது போல், என் குடும்பம் மற்றும் பயிற்சியாளர் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். இப்போது உலக சாதனை நிகழ்த்தியிருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவதே என் எதிர்காலம் லட்சிச்யம்.
ஸ்கேட்டிங் விளையாட்டை, யாரும் விளையாட்டாக பார்ப்பதில்லை, அதை ஒரு பொழுதுபோக்காக தான் பார்க்கிறார்கள். ஆனால், அதில் பெரிய அளவில் ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்துகளை எல்லாம் கடந்து தான் பலர் இந்த விளையாட்டில் சாதித்து வருகிறார்கள். அதனால், இளைஞர்களில் இந்த விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகளை அரசு ஏற்படுத்துவதோடு, இந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மூழ்கியிருக்கிறார்கள். இது அவர்களுக்கு பெரும் ஆபத்தை கொடுக்க கூடியது. இதில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்றால் விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். சினிமாவில் சூப்பர் ஸ்டார்களை தேடும் இளைஞர்கள், விளையாட்டுத் துறையில் சூப்பர் ஸ்டார்களை தேடினால் அவர்களுடைய எதிர்காலம் வலமுடனும், நலமுடனும் இருக்கும்.” என்றார்.
ஸ்கேட்டிங் பயிற்சியாளர் டோனா சதிஷ் ராஜா பேசுகையில், “மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியாவின் சாதனை மிகப்பெரிய விஷயம். அவர் இந்த சாதனைக்காக மிக கடுமையாக உழைத்தார். இன்று சாதனை நிகழ்வு நடந்த போது கூட, அவர் பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக சாதனையை நிறைவு செய்தார். அவருடைய சாதனைகள் தொடரும்.
நான் மெரினா கடற்கரையில் தான் பயிற்சி அளிக்கிறேன். ஆனால், இப்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால் மெரினாவில் இருந்த ஸ்கேட்டிங் தளம் அகற்றப்பட்டுவிட்டது. இதனால், தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஸ்கேட்டிங் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்கேட்டிங் தளங்களை அமைத்து கொடுக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் விளையாட்டு மைதானங்களிலும் ஸ்கேட்டிங் தளங்களை அமைத்து கொடுத்தால் பல இளைஞர்கள் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதிப்பார்கள்.” என்றார்.
பிளாக் டைகர் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி (Black Tiger Roller Skating Academy)-யில் கடந்த 5 வருடங்களாக பயிற்சி மேற்கொண்டு வரும் ஏ.ஜே.ரபியா சக்கியா, இதற்கு முன்பு பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.
SSFI-ன் 21ம் தேசிய வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கொண்ட ரபியா சக்கியா, 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றவர், Hindustan Sports Foundation Marathon போட்டியில் கலந்துக்கொண்டார்.
10 வது தமிழ்நாடு வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷில் போட்டில் கலந்துக்கொண்டு ஒரு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஸ்கேட்டிங் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
எம்.எம்.டைகர் இண்டர் கிளப் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துக்கொண்டவர், ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தினார்.
குளோபல் ரெக்கார்ட்ஸ் ரிசர்ஜ் அண்ட் பவுண்டேஷன் (GLOBAL RECORDS RESEARCH AND FOUNDATION) தேசிய அளவிலான சாதனைகளை நிகழ்த்தியவர், குளோபல் ரெக்கார்ட்ஸ் ரிசர்ஜ் அண்ட் பவுண்டேஷன் சார்பில் ஆசிய பசிபிக் அளவில் சாதனை புரிந்துள்ளார்.
மேலும், குளோபல் ரெக்கார்ட்ஸ் ரிசர்ஜ் அண்ட் பவுண்டேஷன் (GLOBAL RECORDS RESEARCH AND FOUNDATION) சார்பில் சிறுவர்களுக்கான சாதனை மற்றும் அதே அமைப்பின் குளோபல் ஐகான் (GLOBAL ICON) என பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள ரபியா சக்கியா, தஞ்சையில் நடைபெற்ற CBSCE ZONALS CLUSTERS MEET நிகழ்விலும் கலந்துக்கொண்டு சாதித்துள்ளார்.
இப்படி, இந்த சிறு வயதில் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள, ரபியா சக்கியாவுக்கு பயிற்சி அளித்தவர் டோனா சதிஷ் ராஜா.
ஸ்கேட்டிங் விளையாட்டில் பல்வேறு திறமைசாலிகளை உருவாக்கியிருக்கும் டோனா சதிஷ் ராஜா, இந்த ஒரு விளையாட்டு மட்டும் இன்றி, சிலம்பம், வாள் சண்டை, கராத்தே, பாஸ்கெட் பால் என பல்வேறு விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்ற டோனா சதிஷ் ராஜா, மோனோ நடிப்பு, மைம், வெப் டிசன் என 15 வகையான கலைகளை கற்றுத் தேர்ந்தவர் ஆவார். இதற்காகவே இவருக்கு கடந்த 2017 ஆமாண்டு ‘கலாம் விரிட்சம்’ என்ற பெயரில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை மற்றும் சினிமாத்துறை என இரண்டிலும் பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கி கொண்டிருக்கும் டோனா சதிஷ் ராஜா, தனது மாணவி ரபியா சக்கியாவின் ஸ்கேட்டிங் உலக சாதனை, ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ உடன் நிற்காமல் தொடர்ந்து பல்வேறு சாதனையாளர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.