கஸ்டடி- விமர்சனம்
கடமை தவறாத கடைநிலைக் காவலரான சிவா (நாக சைதன்யா), காதலி ரேவதியை (கீர்த்தி ஷெட்டி), அவரது பெற்றோர் நடத்தவிருக்கும் அவசரத் திருமணத்திலிருந்து மீட்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். இந்நிலையில், மாநில முதல்வருக்காக (பிரியாமணி) கொலைகளைச் செய்திருக்கும் ராஜு (அரவிந்த்சாமி), அவரைக் கைது செய்து அழைத்துச் செல்லும் சிபிஐ அதிகாரி ஜார்ஜ் (சம்பத்) ஆகியோரை, சாலை விதிமீறல் வழக்கில் கைது செய்கிறார் சிவா. முதல்வர் உத்தரவுபடி, சிபிஐ-யிடமிருந்து ராஜுவை மீட்டு அழிக்க முயல்கிறது காவல்துறை. ஆனால் அவர்களை வீழ்த்தி ராஜுவையும் ஜார்ஜையும் அழைத்துக்கொண்டு பெங்களூரு நீதிமன்றம் செல்கிறார் சிவா. ஐஜி (சரத்குமார்) தலைமையிலான போலீஸ், இவர்களைப் பிடிக்கும் வேட்டையில் இறங்குகிறது. ராஜுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் சிவாவின் முயற்சி வெற்றிபெற்றதா, இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
90-களின் பிற்பகுதியில் ஆந்திராவில் நடப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. காவல்துறைக்கும் சிபிஐக்கும் இடையிலான மோதலில், அறத்தின் பக்கம் நின்று போராடும் கடைநிலைக் காவலன் கதையை பரபரப்பான சேஸிங், வலுவான கதாபாத்திரங்கள், தனித்துவ நகைச்சுவை ஆகியவற்றால் சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால், வழக்கமான கதைக் களம், ஊகிக்கக்கூடிய திருப்பங்கள், திணிக்கப்பட்ட காட்சிகள், தேவையற்ற பாடல்கள் சோர்வைத் தருகின்றன.
மையக் கதாபாத்திரங்களின் பின்னணியை நிறுவ எடுத்துக் கொள்ளப்பட்ட முதல் 40 நிமிடக் காட்சிகளில், புதுமையும் சுவாரசியமும் இல்லை. அரவிந்த்சாமி கதாபாத்திரத்தின் வருகைக்குப் பிறகு ஓரளவு சூடுபிடிக்கும் திரைக்கதை இடைவேளை வரை வேகமாகநகர்கிறது. குறிப்பாக அணைக்கட்டுக்குள்ளும் நீருக்குள்ளும் நடக்கும் சேஸிங் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் பாதியில் நாயகன் இந்த விவகாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதற்கான காரணத்தைச் சொல்லும் ஃப்ளாஷ்பேக், தேவையற்றத் திணிப்பு.
பிறகு நடப்பவை அனைத்தும் யூகிக்கும்படி இருப்பது திரைக்கதை பலவீனத்தைக் காட்டுகிறது. அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் ஒரே நாளில் நல்லவராக மாறிவிடுவதும் நம்பும்படியாக இல்லை.
நாக சைதன்யா, கதாபாத்திரத்தைச் சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். அவர் பேசும் தமிழில், தெலுங்கு வாடைஇம்சிக்கிறது. கீர்த்தி ஷெட்டி நன்றாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் வசனங்களைத் தமிழில் பேசியிருப்பதை உணர முடிகிறது. அரவிந்த்சாமி அசத்தியிருக்கிறார். நக்கல் தொனியில் பேசும் வசனங்களும் முதல்வரை ஒருதலையாகக் காதலித்ததாகச் சொல்வதும் கைதட்டல்களைப் பெறுகின்றன.
எதிர்மறையான கதாபாத்திரத்தில் சரத்குமாரும் கவுரவத் தோற்றத்தில் ராம்கியும் கவனம் ஈர்க்கிறார்கள். சிபிஐ அதிகாரிகளாக சம்பத், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, மாஸ் காட்சிகளுக்கும் சேஸிங் காட்சிகளுக்கும் வலு சேர்த்திருக்கறது. காவல் நிலையத்துக்குள்ளும் இரவு நேரத்திலும் நகரும் கட்சிகளில் எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவுத் திறமை சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
திரைக்கதையை இன்னும் கச்சிதமாக அமைத்திருந்தால் ‘கஸ்டடி’, டப்பிங் பட உணர்வைத் தராமல் இருந்திருக்கும்.