அறியவன் – விமர்சனம்
எம் ஜி பி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக நாயகந நாயகி இஷான்- ப்ரானாலி நடிப்பில் உடன் நிஷ்மா, டேனியல் பாலாஜி, ரமா, சூப்பர் குட்சுப்பிரமணி நடிக்க மாறி செல்வன் கதைக்கு மித்ரன் ஜவஹர் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம். அறியவன்
தன்னை ஒருவன் காதலிப்பதாகச் சொன்னால் அந்தக் காதலை ஏற்றுக் கொண்டால் அதனால் எழும் நம்பிக்கையின் பேரில் கல்யாணத்துக்கு முன்பே எந்த எல்லைக்கும் காதலனை அனுமதிக்கும் பெண்கள் இப்போது அதிகமாகி வருகிறார்கள் .
அப்படி எல்லை மீறுபவன் நல்லவனாக இருந்தால் சில சமாளிக்கக் கூடிய பிரச்னைகளோடு விஷயம் சுமூக நிலைக்கு வந்து விடுவது உண்டு
ஒரு வேளை அவன் உடல் கிடைத்த பிறகு கைவிட்டுப் போகும் கயவன் என்றால் அதனால் பெண்ணுக்கு எழும் பாதிப்புகள் அதிகம் . அதற்கும் மேல் போய் ,
காதலின் பெயரால் தன்னை நம்பி வந்த பெண்ணை தான் அனுபவிப்பது மட்டுமின்றி அடுத்தகட்டமாக மேலும் சிலருக்கு விருந்தாக்கி அதை படம் எடுத்து பலருக்கும் காட்டி அவர்கள் சொல்லும் ஆண்களுக்கு இணங்க வேண்டும் என்று அந்தப் பெண்களை வற்புறுத்தி அப்படியே நடக்கச் செய்து கொடுமை செய்யும் கொடியவனாக அவன் இருந்தால் அந்தப் பெண்ணின் நிலைமை என்ன?

அப்படி ஒரு பெண் சிக்கிக் கொண்ட நிலையில் , இன்னொரு பக்கம் ஓர் கபடி வீரனுக்கும் இளம்பெண்ணுக்குமான ( இஷான்- ப்ரானாலி) காதலில் ஓர் எதிரபாராத சிக்கல் வருகிறது . காதலியின் தோழி (நிஷ்மா) தற்கொலைக்கு முயல , காதலி காரணம் கேட்கும்போது, தானும் மேற்படி காமுகக் கூட்டத்தில் சிக்கிய கதையை சொல்கிறாள் தோழி .
தோழியின் நிலையை காதலி காதலனிடம் சொல்ல , காதலன் தோழியை ஏமாற்றியவனை தட்டிக் கேட்க, சண்டையில் அந்த அயோக்கியனின் கையை எதிர்பாரதவிதமாக வெட்டி விடுகிறான்.
வெட்டுப்பட்டவன் சாதாரண ஆள் அல்ல. இது போல பெண்களை வலைவீசிப் பிடித்து மயக்கி அனுபவிக்க ஏராளமான இளைஞர்களை தயார் செய்து அனுப்பி , அவர்கள் அனுபவித்தது மட்டுமின்றி அந்தப் பெண்களை மற்றவர்க்கும் விருந்தாக்கி அதை படம் எடுத்து மிரட்டி தாங்கள் விரும்பிய அரசியல்வாதிகள் , அதிகாரிகள், தொழில் அதிபர்களுக்கு எல்லாம் அந்தப் பெண்களை அனுப்பி கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒரு சர்வ பலமும் மூர்க்கமும் கொண்ட அயோக்கியனின் தம்பி. அவன் நாயகனுக்கு எதிராக களம் இறங்க என்ன நடந்தது என்பதே இந்தப் படம்.
அப்படி ஒரு கொடியவனாக டேனியல் பாலாஜியும் அவனை முறைப்படி மூளையையும் வீரத்தையும் பயன்படுத்தி பழிவாங்கும் நாயகனாக அறிமுக கதாநாயகன் இஷானும் நடித்துள்ளனர்
இஷான் உற்சாகமாக நடிக்கிறார் . ஆக்ஷன் சீன்களில் அசத்தலாக சண்டை போட்டு நடிக்கிறார் . உயரமும் குரலும் அவருக்கு பலம். நாயகன் என்பதற்காக படத்தில் தானே எல்லாமும் செய்ய வேண்டும் என்று எண்ணாமல் சரியான கிளைமாக்ஸ் க்கு ஒத்துழைத்த வகையில் திரைக்கதையின் அருமை புரிந்தவராகவும் இருக்கிறார் . நடிப்பில் இன்னும் கொஞ்சம் சிரத்தை தேவை. அடுத்தடுத்த படங்களில் அவர் அதை சாதிக்கலாம் தொடர்ந்து நல்ல படங்கள் அமைந்தால் இஷான் மேலும் புகழ் பெறுவார்
அழகான ப்ரானாலி இது போன்ற ஒரு கதையில் காதலும் உணர்ச்சிவசமுமாக என்ன பங்களிப்பு செய்ய முடியுமோ அதைச செய்து உள்ளார் . நிஷ்மா ஒகே . டேனியல் பாலாஜி வில்லனாக மிரட்டுகிறார் சத்யனின் காமெடி காட்சிகள் பொழுது போக்கு
விஷ்ணுவின் ஒளிப்பதிவு சிறப்பு .
வேத் ஷங்கர், கிரிநாத் இவர்களோடு சேர்ந்து ஜேம்ஸ் வசந்தன் அமைத்திருக்கும் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருப்பதே சுகம்தான் . ஆனால் அதுவே சாக்கு என்று இருக்காமல் இன்னும் இனிய பாடல்கள் கொடுத்து இருக்கலாம் . எனினும் பின்னணி இசை பாராட்டும்படி உள்ளது
கோயம்பேடு சண்டைக் காட்சி உள்ளிட்ட சில இடங்களில் லாஜிகே மீறல்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை . அதே நேரம் காட்சிகள் விறுவிறுப்பாக போவதையும் பாராட்ட வேண்டும்
காமுகக் கயவர்களை டேனியல் பாலாஜி தயார் செய்யும் காட்சி விதிர் விதிர்க்க வைக்கிறது . அதற்கு சரியான தீனி போடும் மகிஷாசுரமர்த்தினி கிளைமாக்ஸ் அருமை . பாரதியாரின் பாடல் வரிகளோடு படம் முடிவது சிறப்பு .
பெண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நிஜமாகவே ஆதரிக்க வேண்டிய அரிய படம்தான் இந்த அரியவன்.