பெல்-விமர்சனம்
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்த வரைக்கும் சிறிய படங்கள் நல்ல கதைய அம்சத்தோட விறுவிறுப்பாக இருந்தா அந்த படத்தை எப்பயுமே தோல்வி அடைய விடமாட்டாங்க.
அப்படி சிறிய பட்ஜெட்டில் நமக்கு தேவையான தகவல்களோட வந்திருக்கும் படம் தான் பெல்.
தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இப்பொழுது மறைக்கப்பட்ட சில மருத்துவ ஆதாரங்களை திறக்க தையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
சித்தர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள் நாயகனின் குடும்பத்தினர். அவர்கள் நூறு வருடங்கள் வாழக்கூடிய சக்தியை கொடுக்கும் மூலிகை பாதுகாத்து வருகின்றனர். அதேபோன்று சித்தர்களின் வழித்தோன்றலில் வந்த குரு சோமசுந்தரம் அந்த மூலிகையை கைப்பற்றி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். இது நிறைவேறியதா? அந்த மூலிகை பாதுகாக்கப்பட்டதா என்பதே பெல் திரைப்படம்.
அகத்திய சித்தரின் சந்ததியினராக நடன இயக்குனர் ஸ்ரீதர் நடித்துள்ளார். கண்பார்வை தெரியாதவர் என்பதால் தனக்கு தானே ஒரு உருவத்தை உருவகப்படுத்திக் கொள்கிறார். அந்த உருவத்தில் வருபவராக மறைந்த நடிகர் நிதீஷ் வீரா நடித்துள்ளார். இவரது நண்பராக தயாரிப்பாளர் பீட்டர் நடித்துள்ளார். நிதீஷ் வீரா கண் பார்வையற்றவராக சிறப்பாக நடித்துள்ளார். மூலிகையை காப்பாற்ற நினைக்கும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளார். இவரது நண்பராக நடித்துள்ள பீட்டர் நடிப்பும் நன்று. ஸ்ரீதர் மாஸ்டர் இத்தனை பெரிய நடிகராக என ஆச்சரியப்படவைத்துள்ளார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக துர்கா நடித்துள்ளார். ஒரே கதாபாத்திரத்தை இருவேறு நடிகர்களாக காட்டியுள்ளனர். இது ஆரம்பத்தில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும் போக போக புரிந்து கொள்ள முடிகிறது. குரு சோமசுந்தரம் நடிப்புதான் இப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. சித்தர் வம்சத்தில் வந்தாலும் பணத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்யும் கொடூரனாக வில்லத்தனம் காட்டியுள்ளார்.
ஜாக் அருணாச்சலம், ஷார்மிஷா,சுவெதா டோராத்தி,ஜோஸ்பின் ஆகியோர் நடிப்பும் நன்று. நமது முன்னோர்களும் சித்தர்களும் எண்ணற்ற மூலிகைகளை நமக்காக விட்டுச் சென்று உள்ளனர்.ஆனால் அதன் அருமை புரியாமல் மனிதர்கள் இருக்கின்றனர். இன்னும் மலைகளில் எத்தனையோ மூலிகைகள் உள்ளன. அதனை எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தை இயக்குனர் வெங்கட் புவன் இயக்கி உள்ளார். வெயிலோன் வசனங்கள் இன்றைய நிலைமையை உணர்த்துகின்றன. பரணிக்கண்ணனின் ஒளிப்பதிவு மலைகளையும் இயற்கையையும் கண்குளிர படம்பிடித்துள்ளன.
தியாகராஜனின் எடிட்டிங் ஓகே. ராபர்ட்டின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் காட்சிகளின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.
மொத்தத்தில் இந்த பெல் திரைப்படத்தில் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மருத்துவ குறிப்புகளையும் மருத்துவ முறைகளையும் முறையான பயன்பாட்டுக்கு இன்றளவும் கடைப்பிடிக்க வேண்டியது நம் கடமை என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது இப்படம்.
அது மட்டுமல்லாமல் இன்றைக்கு பல பேர் ஆங்கில மருத்துவத்தில் அதிகம் கவனம் செலுத்தி உடல் நிலையை மிகவும் மோசமடைய செய்து கொள்கிறார்கள் அது தவறு நம் முன்னோர்கள் கண்டுபிடித்த சித்தர்களின் மருத்துவ குறிப்பை சரி என்பதே இப்படத்தின் மையக் கரு.
தமிழர்களின் பழமை மாறாகவும் சித்தர்களின் குறிப்பு மாறக்கூடாது என்பதை மையமாக எடுத்த இயக்குனருக்கு ஒரு வாழ்த்துக்கள்.
இந்த பெல் நிச்சயம் ரசிகர்களின் காதில் ஒலிக்கும்