டைரி – விமர்சனம்
தமிழ் சினிமாவின் கிரைம் த்ரில்லர் ஜேம்ஸ் பாண்டாகவே அருள்நிதி மாறிவிட்டார். கிரைம் த்ரில்லர் கதை என இயக்குநர் யாராவது சொன்னாலே போதும் எங்கிட்ட வாங்க நான் பார்த்துக்குறேன் என குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படத்தைக் கொடுத்து வருகிறார். இந்த வாரம் அப்படியொரு படமாக வெளியாகி உள்ள டைரியின் குறிப்புகள் என்ன சொல்கிறது என்பதை விவரமாக இங்கே காண்போம்..
டைரி என்றாலே பழைய நினைவுகளை சொல்வது தானே. படத்தின் கதையும் அதுதான். எஸ்.ஐ பயிற்சியை முடித்து விட்டு போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்கும் ஹீரோ அருள்நிதி பல வருடங்களாக பிடிபடாமல் இருக்கும் கொள்ளை கும்பலை பற்றிய வழக்கை கையில் எடுக்கிறார். மறுபுறம் ஒரு பேருந்தில் பல வித முகங்கள் பல வித பின் கதைகளுடன் அந்த பேருந்தில் பயணித்து வருகின்றன. 13ம் நம்பர் வீடு போல 13வது ஹேர்பின் பெண்டில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்த மூன்று கதைகளும் எப்படி சங்கமிக்கின்றன இது பேய் படமா? அல்லது த்ரில்லர் படமா? என்பது தான் கதை.
போலீஸ் அதிகாரியாக ஒரு முடிக்கப்படாத வழக்கை கையில் எடுத்து விசாரிக்கும் அருள்நிதி அந்த பேருந்துக்குள் ஏறி திருடர்களை அடித்து உதைக்கும் இடத்தில் செம ட்விஸ்ட் உடன் வரும் அமானுஷ்ய இடைவேளைக் காட்சி படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. அருள்நிதி யார், இந்த பேருந்தில் பயணிக்கும் பயணிகள் யார், அந்த ஹேர்பின் பெண்டில் அப்படி என்ன அமானுஷ்யம் விபத்துகளை நடத்துகிறது என சுவாரஸ்யம் குறையாமல் இயக்குநர் சொல்லி உள்ளார்.
முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமாராக படம் இருந்தால் ஓடவே ஓடாது. ஆனால், முதல் பாதியை விட இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக இருந்தால், தியேட்டரை விட்டு வெளியே வரும் போது ரசிகர்களுக்கு நிச்சயம் மன நிறைவு கிடைக்கும். அருள்நிதியின் டைரி படம் அதை நன்றாகவே கொடுக்கிறது. இரண்டாம் பாதியளவுக்கு முதல் பாதியிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இந்த ஹாரர் த்ரில்லருக்காக பல வருடங்கள் இயக்குநர் போராடி உள்ளது திரையிலும் தெளிவாக தெரிகிறது. அருள்நிதியின் நடிப்பு படத்துக்கு படம் மெருகேறிக் கொண்டே போகிறது. ரான் எதன் யோகனின் இசையில் உருவாகி உள்ள மூன்று பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அழகாக இருப்பது சிறப்பு. பின்னணி இசையிலும் திகிலூட்டுகிறார். இரவு நேரத்திலேயே கதை பெரும்பாலும், அதிலும் ஒரு பஸ்க்குள்ளே டிராவல் செய்ய வேண்டிய நிலையில், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இன்னொரு இயக்குநராகவே செயல்பட்டுள்ளார். பழைய காலத்து பொருட்களை சரியாக பயன்படுத்திய விதத்தில் கலை இயக்குநரும் கலக்கி உள்ளார்
அருள்நிதியை தவிர படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் புதுமுக நடிகை பவித்ரா, ஷாரா, ஜெய பிரகாஷ் உள்ளிட்டவர்கள் சும்மா பெயருக்கு வந்து செல்கின்றனர். ஷாரா டபுள் மீனிங் ஜோக் அடித்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால், அதெல்லாம் சரியாக அமையவில்லை. சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி படம் சாயல் கொஞ்சம் எட்டிப் பார்ப்பது பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது. மொத்தத்தில் த்ரில்லர் பட விரும்பிகளுக்கு இந்த படம் ட்ரீட்