ஃபர்ஹானா – விமர்சனம்
முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த ஃபர்ஹானா, தனது தந்தை அஜீஸ் (கிட்டி), கணவர் கரீம் (ஜித்தன் ரமேஷ்), மற்றும் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். குடும்ப வருமானம் போதாததால், வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. கால் சென்டர் ஒன்றில் சேர்கிறார். அதே நிறுவனத்தில் மற்றொரு பிரிவில் அதிக ‘இன்சன்டிவ்’ கொடுக்கிறார்கள். தோழிகள், ‘உனக்கு அந்த வேலை சரிபட்டு வராது’ என்று மறுத்தும், பணத்துக்காக அந்த டீமில் இணைகிறார் ஃபர்ஹானா. அந்த வேலை அவருக்கு அதிர்ச்சியை கொடுக்க, ஒரு சிக்கலையும் சிரமமின்றி கொண்டு வந்து நிறுத்துகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது கதை.
திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் நடுத்தர முஸ்லிம் குடும்ப வாழ்க்கையையும் பொருளாதாரத் தேவையை எதிர்கொள்ளும் ஓர் இளம் பெண்ணின் மனநிலையையும் இயல்பாகக் காட்டியிருக்கிறார், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். பெண்களுக்கான பொருளாதார விடுதலையைப் பேசும் அவர், வேறு பெயர்களில் முகமறியா நபர்களுடன் நடக்கும் ‘ஃபிரண்ட்ஷிப் சாட்’களின் மூலம் வரும் ஆபத்துகளையும் எதார்த்தமாகக் காட்சிப்படுத்தி எச்சரித்திருக்கிறார் அழகாக.
ஒரு பெரும் குற்றம் நடந்த பின்னும்‘ஃபிரண்ட்ஷிப் சாட்’ தொடர்வது எப்படி? இறை நம்பிக்கைக் கொண்ட ஃபர்ஹானா பணத்திற்காக, அந்தச் சிக்கலான வேலையில் தொடர்வது ஏன் என்பது போன்ற கேள்விகள் தானாக எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் பதற்றத்தைக் கூட்டும் தெளிவான திரைக்கதையும் காட்சி அமைப்பும் இக்கேள்விகளை எளிதாக மறக்கடித்து விடுகின்றன.
இந்தப் படத்தின் பெரிய பலம், கதாபாத்திரத் தேர்வு. ‘ஃபர்ஹானா’ என்ற பாத்திரத்துக்குள் அப்படியே பொருந்திப் போகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். அவர்தான் முதன்மை பாத்திரம் என்பதால், சின்ன சின்ன அசைவுகளில் கூட ‘ஃபர்ஹானா’வாகவே வாழ்ந்திருக்கிறார். ஜித்தன் ரமேஷுக்கு அப்பாவி கணவராக சிறப்பான வேடம். இயலாமையின் வெளிப்பாடாக இருக்கும் முகத்தோடு, ‘மீட்டர்’ தாண்டாத நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.
சஸ்பென்ஸ் கேரக்டரில் வரும் செல்வராகவன், பழமைவாத பெரியவராகக் கிட்டி, தோழி அனுமோள், சக ஊழியர் ஐஸ்வர்யா தத்தா உட்பட அனைவரும் கதாபாத்திரமாகவே தங்களை இணைத்திருக்கிறார்கள்.
கூட்டுக் குடும்ப வீடு, அலுவலகம், மெட்ரோ ரயில் ஆகியவைதான் லொகேஷன் என்றாலும் சிலிர்ப்பைத் தருகிறது கோகுல் பினாயின் ஒளிப்பதிவு. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை, இரண்டாம் பாதியில் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பும் கலை இயக்கமும் படத்துக்குப் பலம்.
மனுஷ்யபுத்திரன், நெல்சன், சங்கர் தாஸ் ஆகியோரின் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக செல்வராகவனுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்குமான உரையாடல் சுவாரஸ்யம்.
செல்வராகவன், ஃபர்ஹானாவின் முழு விவரத்தையும் அறிவது எப்படி? அவருக்கான பின்னணி என்ன என்பதற்கான பதில் இல்லை. வறுமைக்காக வேலைக்குச் செல்லும் ஃபர்ஹானா, குரல் வழி பழகியவரை, கணவரிடம் பொய்ச் சொல்லிவிட்டுச் சந்திக்கச்செல்லும்போது, அந்தக் கதாபாத்திரத்தின் மீதான நம்பிக்கை பொத்தென்று குறைகிறது. இதுபோன்ற குறைகளைக் களைந்திருந்தால் ஃபர்ஹானாவை, இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம்.