திருநள்ளாறு கோவில் சிறப்புக்களும்,திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறையும்:
திருநள்ளாறுஇறைவன் திருப்பெயர்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்.
இறைவி திருப்பெயர்: போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை
தல மரம்: தர்ப்பை
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்,அன்ன தீர்த்தம், அகத்திய தீர்த்தம்,நள தீர்த்தம், நளகூப தீர்த்தம்.
தர்ப்பாரண்யேஸ்வர ஸ்வாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக அருளுகிறார். இங்கு நந்தியும் பலி பீடமும் சற்றே நகர்ந்து இருப்பதைக் காணலாம்.
தர்ப்பாரண்யேஸ்வரர் திருமேனியில், தர்ப்பை முளைத்த தழும்பு இன்றளவும் இருப்பதைக் காண முடியும்.

திருஞானசம்பந்தர், மதுரையில் சமணரோடு நடத்திய அனல் வாதத்தில், இத்திருத்தலத்தில் இயற்றிய திருப்பதிகமான ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்று துவங்கும் பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் வெளிவந்தது.. அதனால் அதற்கு ‘பச்சைப் பதிகம்’ என்று பெயர்.
இந்தப் பச்சைப்பதிகத்தைப் பாடி, சனிபகவானை வழிபடுவோருக்கு, ‘சனி தோஷம்’ உண்டாகாது என்பது நம்பிக்கை.
இந்தத் திருத்தலம் ‘சோமாஸ்கந்த மூர்த்தி’ எனும் இறைவடிவம் திருமாலால் உருப்பெற்ற திருத்தலமாகும்..
திருமால், தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு, மன்மதனை மகனாகப் பெற்றார். அதனால், முருகப் பெருமானை, சிவபிரானுக்கும் உமையம்மைக்கும் இடையே அமைத்து, ‘சோமாஸ்கந்த மூர்த்தத்தை’ அமைத்தார்.
இந்த மூர்த்தத்தை இந்திரன் வழிபட்டு, ஜெயந்தன், ஜெயந்தி என்ற இரு மக்களை அடைந்தான்.அதனால், குழந்தை பாக்கியத்திற்குரிய திருத்தலமாகவும் இது விளங்குகிறது.
இத்திருக்கோயிலில், நள தீர்த்தத்தில் நீராட, சனி தோஷம் நீங்கும் என்று கூறப்படுவதைப் போல், பிரம்ம தீர்த்தத்தில் நீராட, முன் வினை, சாபங்கள் நீங்கும், வாணி தீர்த்தத்தில் நீராட, மூடனும் கவி பாடுவான் என்று சொல்லப்படுகின்றது.
முன்னொரு காலத்தில், உலகிற்கு ஏதேனும் பெரும் கேடு சூழ இருந்தால், இந்த மூன்று தீர்த்தங்களில் உள்ள நீர் சிவப்பு நிறமாக மாறுமாம்.. இதை ஓர் அறிகுறியெனக் கொண்டு பரிகார பூஜைகள் செய்து நலம் பெறுவார்களாம்.
நளதீர்த்தத்தை நளனுக்காக இறைவன் அருள் செய்தது வைகாசி மாதம்,புனர்பூச நக்ஷத்திரம் ஆகும். அந்நாள் திருநள்ளாற்றில் மிக விசேஷமான வழிபாட்டு நாளாகும்.

இங்கிருக்கும் சனிபகவான் சன்னிதி பிரசித்தி பெற்றது… முதலில் சிவபிரானை வணங்கி, பின்னரே சனிபகவானை வழிபட வேண்டும்..பலர் அறியாத ஒரு விஷயம்..
இத்திருக்கோயிலில் ராஜகோபுரத்தினுள் நுழைந்ததும், முதல் படியைத் தொட்டு வணங்க வேண்டும்..
காரணம், நள மகாராஜா இத்திருக்கோயிலினுள் நுழையும் போது, சனி பகவான் அவரை விட்டு நீங்கி, வாசல் படியிலேயே தங்கி விட்டார்.
பின்னர் சிவபிரான், சனி பகவானுக்கு அருளி, தம் திருக்கோயில் முகப்பில் தனிச்சன்னிதி கொள்ளுமாறு அருளினார்.
ஆகவே படியைத் தொட்டு வணங்க வேண்டும்.
திருக்கோயில் வழிபடும் முறை:
முதலில் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ள நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும்.
காலை 5 மணிக்கு நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும்.
நள தீர்த்தக் கரையில் உள்ள நளவிநாயகர், பைரவரை வணங்க வேண்டும்.
பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, கோயிலுக்கு வந்து, கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, பின் ராஜகோபுரத்தை வணங்கி ராஜகோபுரத்துள் நுழைய வேண்டும்..
உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை.

அதனால் இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்.
பின்பு கோயிலுக்குள் உள்ள முதல் பிரகாரத்திற்கு சென்று
சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்ய வேண்டும்.
இங்கு நள சரிதம் சித்திரங்களாக வரையப்பட்டிருக்கிறது.. இந்தச் சித்திரங்களை பக்தியுடன் பார்வையிடுவது நள சரிதத்தைப் படிப்பதற்குச் சமம் என்று சொல்லபடுகிறது.
பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும்.அதன் பின் தர்ப்பாரண்யேஸ்வரரையும், தியாகராஜர் சன்னிதியில் இருக்கும் மரகத இலிங்கத்தையும் வழிபட வேண்டும்..
அதன் பின், பிராகரத்தில் அமைந்திருக்கும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிகளை வழிபட வேண்டும்..
பின்பு வெளிப்பிரகாரம் சென்று, கட்டைக் கோபுர வாயிலில் அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும்..
அதன் பின்னரே சனிபகவானை தரிசிக்க வேண்டும்.. இதுவே முறையான வழிபாடாகும்…
சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல.
இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.
இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர்.
இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டதால்
எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம்.
ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.
இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனிக்கிழமை விரதம்: சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும்.
சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம்.
இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம்.
தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம்.
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம்.
எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழை களுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.
சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம்.
எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம்.
ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம்.
அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.
சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிகையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.