வரலாறு முக்கியம் – விமர்சனம்
வரலாறு முக்கியம் திரைப்படத்தின் கதை என்னவென்று பார்த்தால், ஏற்கனவே நாம் பார்த்து சலித்து நொந்துப்போன காதல் கதைதான். இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவா யூடியூபராக வருகிறார். கோயம்புத்தூரில் அப்பா கேஸ் ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார் ஜீவா. படித்து முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாததால் யூடியூப் சேனலை தொடங்குகிறார். இவர் ஏற்கனவே ஆரம்பித்த இரண்டு யூடியூப் சேனல்களும் கஷ்டமானதால், மூன்றாவதாக ஒரு சேனலை தொடங்கி கண்டென்டுக்காக அலைந்து திரிகிறார்.
இந்த நேரத்தில் தான், கார்த்தி (ஜீவா) வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மலையாள குடும்பம் குடி வருகிறது. அதில் அக்கா யமுனாவை (காஷ்மிரா) ஜீவா காதலிக்கிறார், தங்கை பிரக்யா ஜீவாவை காதலிக்கிறார். அதன் பிறகு யார் யாரை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது தான் வரலாறு முக்கியம் திரைப்படத்தின் மொத்தக்கதை.
இப்படம் காதல், ரொமான்ஸ் நிறைந்த ஒரு நகைச்சுவை திரைப்படமாகும். சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடித்த கலகலப்பான ஜீவாவை இந்த படத்தில் மீண்டும் பார்க்க முடிந்தது. இருந்தாலும், அதே காதல், அதே கல்யாணம் என அரைத்த மாவையே அரைத்து அதே எண்ணையில் சுட்ட வடை போல இருந்ததால், ரசிகர்கள் சலித்துக்கொண்டார்கள்.
இருந்தாலும் சில காட்சிகள் கொஞ்சம் ரசிக்கும் படி இருந்தது. அதாவது காஷ்மிரா, பிரக்யாவும் பால்கனியில் இருக்கும் போது ஜீவா அவர்களை பார்க்கும் காட்சி உண்மையில் ரசிக்கும் படி இருந்தது, அதே போல கேஎஸ் ரவிக்குமாரின் முன்னாள் காதலி வீட்டுக்கு வரும் காட்சியில் இயக்குநர் கொஞ்சம் மெனக்கெடலுடன் புதுசா யோசித்து இருக்கிறார்.
நடிகை காஷ்மிரா மிகவும் அழகாகவும் அதே சமயம் நடிப்பையும் நன்றாக வெளிப்படுத்தி உள்ளர். படத்தின் முதல் பாதியில், கதாநாயகியின் தங்கையாக வரும் பிரக்யா நன்றாக நடித்துள்ளார். இதில் யார் ஹீரோயின் என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இருவரும் அழகாக நடித்துள்ளார்கள். அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து பாராட்டை பெற்றுள்ளார்கள். ஜீவா மற்றும் விடவி கணேஷ் இடையே நடக்கும் நகைச்சுவை கலாட்டாக்களுக்கு பல இடங்களில் விசில்கள் பறந்தன.
ஏற்கனவே பலத்திரைப்படங்களில் நாம் பார்த்தை கதை என்றாலும், கதையிலும், ஸ்கின் பிளேவிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால், இயக்குர் சந்தோஷ் ராஜன் அதை கோட்டைவிட்டுவிட்டார். கிளைமாக்ஸ் காட்சியில் சொதப்பலோ சொதப்பலாக இருந்தால், பலர் விட்டா போதும்டா சாமி என்று கிளப்பிவிட்டார்கள்;
ஜீவாவின் நடிப்பில் வெளியான ஜிப்ஸி,காலத்தில் சந்திப்போம், 83,சமீபத்தில் வெளியான காபி வித் காதல் பாடல்கள் வெற்றிப்பெறவில்லை. இந்த படம் ஜீவாவுக்கு ஒரு நல்ல படமாக இருக்கு என்று எதிர்பார்த்த நிலையில், இதிலும் ஜீவா சறுக்கி உள்ளார். வரலாறு முக்கியம், ஆனால் கதைத் தேர்வு அதைவிட முக்கியம் இனிமேலாவது ஜீவா அதில் கவனம் செலுத்த வேண்டும்.