‘திருவின் குரல்’ – விமர்சனம்
வாய் பேச முடியாத, காதும் சரியாக கேட்காத,சிவில் இன்ஜினியர் அருள் நிதியின் அப்பா பாரதிராஜா விபத்து ஒன்றை சந்தித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப் படுகிறார். அங்கு பணிபுரியும் பணியாட்கள் தங்கள் லாபத்துக்காக சில கொலைகளை அரங்கேற்றுகிறார் கள். அதில் ஒன்று அருள்நிதியின் அக்கா மகளின் கண்ணில் சிக்கி விடுகிறது.
அதைத் தெரிந்து கொண்ட அவர்கள் அந்தப் பெண்ணை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். அவர்கள் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் கதை! வாய்பேச முடியாத இளைஞராக நடிப்பில் வித்தியாசம் காட்டி இருக்கிறார் நடிகர் அருள் நிதி. பரிசார்த்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.
பாரதிராஜாவுக்கு அப்பா வேடம். நடிப்பில் இயக்குனர் இமயம் கதாபாத்திரத்தை உள்வாங்க வைத்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு பெரிதளவில் முக்கியத்துவம் இல்லாதது அதை எளிதில் கடக்க வைத்து விடுகிறது.
வழக்கம் போல ஆத்மிகாவிற்கு முக்கியத்துவம் இல்லாத ஹீரோயின் வேடம். அவரும் எந்த மாற்றமும் இல்லாமல் நடித்துக் கொடுத்து இருக்கிறார்.
அருள்நிதி மேல் மக்களுக்கு எப்போதுமே ஒரு நம்பிக்கை உண்டு. அது அவர் படங்களில் சிறிதளவாவது கதையம்சம் இருக்கும் என்பது. ஆனால் அதை திருவின் குரல் படம் சுக்கு நூறாக உடைத்து விட்டது.
நல்ல கதைகளை சரியாக கணிக்கும் அருள்நிதி இதில் எப்படி இவ்வளவு அசால்ட்டாக கோட்டை விட்டார் என்று தெரியவில்லை. படம் ஆரம்பிக்கும் போதே படம் அவருக்கான ஆதர்ச திரில்லர் ஜானர் என்பதை சொல்லி விட்டது.
காதல், சொந்தம், பாசம் என எந்த வித்தியாசமும் இல்லாத வழக்கமான பாயசங்கள் காட்சிகளாக கடந்து செல்ல பல்லைக்கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தோம்.
ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் நம்மை மிகவும் சோதித்து விட்டது. காரணம், கதைக்கான காரணம் மிக மிக பலவீனமாக இருந்ததோடு, திரைக்கதையை கொண்டு செல்ல இயக்குனர் ஒன்றிரண்டு காரணங்களை குழப்பி பயன்படுத்தி இருந்தது.
முதல் பாதியியே மூச்சு முட்டி விட்டது. சரி, இரண்டாம் பாதியிலாவது ஏதாவது இருக்கும் என்று பார்த்தால், வில்லன்களை வேறு ரூபத்தில் காட்டுகிறேன் என்ற பெயரில் ஸ்லோ மோஷன் ஷாட்டுகளை வைத்து கொன்று குதறி விட்டார்கள். வில்லன்கள் கும்பலின் தலைவனான அஷரவ் நடிப்பு மிரட்டலாக இருந்தது. உண்மையில் சொல்ல போனால் படத்தின் எல்லா கதாபாத்திரங்களை விடவும் அதிகமாக கவனம் ஈர்த்தது அவரே.
சாம்.சி.எஸ் தெரிந்த ரெக்கார் டையே திருப்பி போட்டு இருக்கிறார். அவரின் பின்னணி இசை பல இடங்களில் இரைச்சலாக இருந்தது ஏமாற்றம். ஒளிப்பதிவாளர் சின் டோ நடிகர்களின் நடிப்பை க்ளோசப்பில் நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ஆக மொத்தத்தில் தமிழ் புத்தாண்டிற்கு திருவின் குரல் தேவையில்லாத ஆணி!