கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் ஹாஸ்டலில் தங்கி இருந்தால் அந்த ஹாஸ்டலுக்குள் என்னென்ன நடக்கும் என்பதை நகைச்சுவையுடன் சற்று இன்றைய இளைஞர்களுக்கு தேவையான இரட்டை அர்த்த வசனங்களை கலவையாக தந்திருக்கிறார் இயக்குனர்.
அதிலும் பாய்ஸ் ஹாஸ்டலில் பிரியா பவானி சங்கர் என்ற ஒரு பெண் உள்ளே வந்ததும் படத்தின் சிரிப்பிற்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை.
மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான அடி கப்யாரே கூட்டமணி என்ற ஹாரர் கலந்த காமெடி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஹாஸ்டல் திரைப்படம். இந்த படத்தில் அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த் போன்றோர் நடித்துள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார், மேலும் ரவீந்திரன் இந்தப் படத்தை தமிழில் தயாரித்துள்ளார். அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மன்மதலீலை படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது, அதன் தொடர்ச்சியாக தற்போது ஹாஸ்டல் திரைப்படம் வெளியாகி உள்ளது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த விடுதிக்கு முன்னாள் ராணுவ அதிகாரி நாசர் தலைமை தாங்குகிறார். மிகவும் ஒழுக்கமாக பசங்களை வளர்ப்பதாக அவரே சொல்லி கொள்கிறார். அந்த விடுதியில் ஒருநாள் இரவு மட்டும் பிரியா பவானி சங்கர் தன்னை தங்க வைக்குமாறு அசோக் செல்வன் இடம் கூறுகிறார், அவரும் பிரியாவை ஹாஸ்டெலுக்குள் யாருக்கும் தெரியாமல் கூட்டி வருகிறார். ஹாஸ்டலுக்குள் வரும் பிரியா பவானி சங்கர் அங்கிருந்து யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் எப்படி வெளியேறினார் என்பதே ஹாஸ்டல் படத்தின் கதை. மலையாளத்தில் வெளியான படத்தை, தமிழ் மக்களுக்கு ஏற்ப எடுத்துள்ளனர். அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடி பார்ப்பதற்கு புது விதமாக, அழகாக உள்ளது. அசோக் செல்வனின் நண்பர்களாக வரும் சதீஷ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் செய்யும் சேட்டைகள் சில இடங்களில் ரசிக்கும்படியாக உள்ளது.
இருந்தாலும் முதல் பாதியில் இருந்த கலகலப்பும் ரசிப்புத் தன்மையும் இரண்டாம் பாதியில் பேய் வந்தவுடன் சற்று குறைவுதான்.
இப்படத்தில் வரும் சில இரட்டை அர்த்த வசனங்கள் நன்றாகவே கைதட்டி ரசிக்க முடிகின்றது.
படத்துக்குப் படம் வித்தியாசமான நடிப்பை காட்டி வரும் நடிகர் அசோக் செல்வனுக்கும், நடிகை ப்ரியா பவானி சங்கருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது தமிழ்சினிமாவில்.