50-வது நாளில் அடியெடுத்து வைத்த வாரிசு
தளபதி விஜய் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி-11ல் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வெளியானது.
தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் வரவேற்புடனும் சேர்ந்து ஐந்து வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடி மிகப்பெரிய சாதனையையும் செய்தது.
கடந்த பிப்-23ஆம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியாகி, குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படமாக அங்கேயும் கூட தனது சாதனையை தொடர்கிறது வாரிசு. அதேசமயம் ஒடிடியில் வெளியானாலும் கூட வாரிசு திரைப்படம் தமிழகமெங்கும் பல திரையரங்குகளில் தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று வெற்றிகரமாக 50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது வாரிசு திரைப்படம். தமிழகமெங்கும் 25 திரையரங்குகளில் 50வது நாளை தொட்டுள்ளது வாரிசு. இதையடுத்து திரையரங்கு நிர்வாகத்தினர் மற்றும் ரசிகர்களால் வாரிசு 50வது நாள் கொண்டாட்டங்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.