‘யாத்திசை’ பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சசிகுமார்!
நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற ‘யாத்திசை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர்கள் தேர்வு குறித்து கேட்டபோது, “சசிகுமார் சார் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு தன் நடிப்பால் கதாபாத்திரத்தையும் படத்தையும் மெருகேற்றியுள்ளார் சசிகுமார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பின்பு அவர் இந்தப் படத்தின் கதையை கேட்டு உடனே ஒத்துக்கொண்டது எங்களுக்கு ஆச்சரியமான விஷயம்” என்றார்.
படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.