‘எப்போதும் ராஜா’ – விமர்சனம்
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் பூ குறிஞ்சி பூ.ஆனால் தமிழ் சினிமாவில் அவ்வப்போது அதிரடியாக வந்து ஆக்சன் இல் அவதாரம் எடுப்பார் ஒரு நடிகர் அவர் வேறுயாரும் அல்ல வின்ஸ்டார் விஜய்.
நம்ம மக்கள் தொடர்பாளர் என பன்முகம் கொண்ட வின்ஸ்டார் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் எப்போதும் ராஜா.
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் காக்கிச்சட்டை போட்ட கதைகள் தோற்றதில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டு தானும் ஒரு காக்கி சட்டைக்கு ஆர்டர் கொடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியிருக்கிறார் விண் ஸ்டார்.
வழியில் பார்க்கிற பெண்கள் எல்லாம் இந்த வாலிபால் ராஜாவிடம் வழிகிறார்கள். “நான் உங்க ரசிகை…” என்று அவரை எடக்கு, முடக்காக மடக்க இவர் அவர்களிடம் எஸ்கேப் ஆகிக்கொண்டே போகிறார். இவரை நம்பி தான் தமிழ்நாடு வாலிபால் டீமே இருக்க இந்திய அளவில் நடைபெறும் மேட்ச்சில் இவர் இடம் பெற இருக்க… என்ன ஆகிறது என்பது கதை.
அண்ணன் இன்ஸ்பெக்டர் ராஜாவோ ஒரு பெண் ஜர்னலிஸ்ட் கடத்தப்பட்ட சம்பவத்தில், கடத்தியவர்களை சுளுக்கெடுத்து உள்ளே தள்ளுவதில் அவரை முதல்வர் ஸ்டாலின், சன் டிவி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் எல்லோரும் பாராட்டுகிறார்கள். ( அட… ஆமாங்க… ஆமா..!)
அதேபோல் மேற்படி வாலிபால் ராஜாவை கிளைமாக்சில் பிரதமர் மோடி தன் x தளத்தில் பாராட்டுகிறார். ( இந்த விஷயமெல்லாம் அவங்களுக்குத் தெரியுமா..?)
இவர்கள் இருவருக்கும் முறையே டேப்லினா, பிரியா என்று ஜோடிகள். இருவருக்கும் டூயட் பாடல்களும் உண்டு.
எம்.ஜி.ஆர், ரஜினி போல் இவர்களை மக்கள் வாழ்த்திப் பாடும் பாடல்களும் உண்டு. வசனங்களும் அவர்களை மனத்தில் வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன.
அதன்படியே பாலியல் தொழிலில் தள்ளப்படவிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி மணமுடித்துக் கொள்கிறார்… இதெல்லாம் சாம்பிள்தான்..!
படத்தின் பட்ஜெட் குறைவு என்பதால்… தமிழ்நாட்டுக்காக இந்திய அளவில் ஆடும் வாலிபால் ராஜா தன் வீட்டு மொட்டை மாடியிலும், மாடி படிக்கட் கைப்பிடிச்சுவர்களிலும் பந்தைப் போட்டு போட்டு பிராக்டிஸ் செய்து கொள்கிறார்.
இரண்டு ராஜாக்களும் முழுப்படத்தை ஆக்கிரமிக்க, நமச்சிவாயம், சோமசுந்தரம், லயன் குமார், ஜெயவேல், செல்வகுமார், ஜோ மல்லூரி எல்லாம் இண்டு, இடுக்கை நிரப்புகிறார்கள். எல்லோருக்கும் சிங்கிள் டேக்கே ஓகே போல…
வில்லி கேரக்டரில் வரும் கும்தாஜ், இறுதிப் போட்டிக்கு வாலிபால் ராஜா போகாமல் தடுக்க, அவரை சல்லாபத்துக்கு அழைக்கிறார். பதிலுக்கு ராஜா, “மண்ணு தின்னப் போற உடம்பு, பொண்ணு தின்னா என்ன..?” என்று கேட்கிறார் பாருங்கள்…
பெட்ரூம் மேட்சை சப்ஜாடாக முடித்த கையோடு வாலிபால் மேட்சிலும் வென்று இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரராகவும் ஆகிறார்.
படத்தின் இறுதியில் நாடு பெருமைப்படும் வீரராக வலம் வருகிறார் வின்ஸ்டார் விஜய்.









