இட்லி கடை – விமர்சனம்
டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. நித்யா மேனன் , ஷாலினி பாண்டே , அருண் விஜய் , ராஜ்கிரண் , சமுத்திரகனி , ஆர் பார்த்திபன் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் எளிய ஃபேமிலி என்டர்டெயினர் படமாக உருவாகியிருக்கிறது இட்லி கடை .
சிறு வயதில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த கதாபாத்திரங்களை வைத்து கற்பனை கதையாக இட்லி கடை படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். ஒரு பக்கம் கிராமத்து வாழ்க்கை , இன்னொரு பக்கம் நகரத்து வாழ்க்கை என தொடங்குகிறது கதை. முதல் 30 நிமிடங்களில் உணர்ச்சிகரமாக கதை சொல்கிறார் இயக்குநர் தனுஷ். முதல் பாதி எமோஷனலாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது. ஜி.வி பிரகாஷ் பின்னணி இசை தனி கவனம் பெறுகிறது.
கதை உணர்ச்சிவசமாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் சோகம் வலிந்து திணிக்கப்படுகிறது. எப்போதும் போல் நடிப்பில் அசத்தியிருக்கிறார் தனுஷ்.

ராஜ்கிரண் தனது ஊரில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய இட்லி கடைதான் அந்த ஊருக்கே அடையாளமாகவும் உள்ளது. ராஜ்கிரணின் மகனான தனுஷ் தனது தந்தையை போலவே தானும் ஆகவேண்டும் என்பதற்காக கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார்.
சொந்த ஊரை விட்டு தனுஷ் செல்வது ராஜ்கிரணுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தனது மகனின் ஆசைக்காக அவர் சரி என சொல்ல ஊரில் இருந்து புறப்படுகிறார் தனுஷ். வருடங்கள் செல்ல, சத்யராஜின் ஏஃப்சி நிறுவனத்தில் மூத்த செஃப் ஆக இருக்கிறார் தனுஷ். ஆனாலும், அவருக்கு தனது சொந்த ஊரில் இருக்கும் மன நிம்மதி அங்கு இல்லை.
சத்யராஜின் மகளான ஷாலினி பாண்டேவும் தனுஷும் காதலிக்க, அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால், இது ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தனுஷின் தந்தை ராஜ்கிரண் இறந்துபோகிறார்.

அதே போல், எமோஷனல் காட்சிகளை தனுஷ் சிறப்பாக இயக்கியுள்ளார். ராஜ்கிரணுக்கு பின் தனுஷ் அந்த கடையை எடுத்து நடத்துவது, சண்டைக்கு சண்டை போடுவது தீர்வு அல்ல, அகிம்சைதான் தீர்வு தரும் என சொன்ன விஷயம் சிறப்பு. அதை திரைக்கதையில் காட்சிகளாக அமைத்த விதமும் நன்றாக இருந்தது. அதே போல் தனுஷை அந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தருணம், தனுஷுக்கு துணையாக தெய்வமாக ராஜ்கிரண் வந்து நின்றது, இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் என அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தன.

பார்த்திபன் கேமியோ ரோல் என்றாலும் கடைசியில் கைதட்டல்களை அள்ளிவிட்டார். சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தாலும், அவர்களுடைய கதாபாத்திரத்திற்கு நிறைய இடம் இருந்தாலும் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இப்படத்திற்கு மற்றொரு பலம் என்றால் அது, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான். பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டிலும் பட்டையை கிளப்பி, படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறார். அதே போல், படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. அதற்கு ஒளிப்பதிவாளர் கிரணுக்கு பாராட்டுக்கள். எடிட்டிங் பக்கா. மற்ற டெக்னிக்கலான விஷயங்களில் குறை ஒன்றும் இல்லை.
மொத்தத்தில் இந்த இட்லி கடை மண் மணம் மாறாமல் கிராமிய வாழ்வியலை சொல்லி இருப்பதால் நகர்வாழ் மக்களுக்கு இந்த படம் எடுபடுமா என்பது சற்று சந்தேகமே.