கிறிஸ்டினா கதிர்வேலன் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் காதலுக்காக வித்தியாசமான படங்கள் நிறைய வந்ததுண்டு அந்த வகையில் வந்திருக்கும் வித்தியாசமான படமே இந்த கிறிஸ்டினா கதிர்வேலன்.
நாயகன் கெளசிக், நாயகி பிரதீபாவை கண்டதும் காதல் கொள்கிறார். அவரது ஒருதலை காதலை வளர்ப்பதற்காக பிரதீபா படிக்கும் கல்லூரியில் சேர்கிறார். இருவரும் கண்களால் காதலை பரிமாறிக் கொண்டாலும், காதலை வெளிப்படுத்தாமல் வலம் வருகிறார்கள். இதற்கிடையே, கெளசிக் தனது நண்பரின் பதிவு திருமணத்திற்கு உதவி செய்யும் விதத்தில் தனது ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை கொடுக்கிறார். பெண் சார்பாக பிரதீபாவும் தனது விபரங்களை கொடுக்க, தவறுதலாக கெளசிக் மற்றும் பிரதீபாவுக்கு திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் கொடுக்கப்பட்டு விடுகிறது.
நாயகியாக நடித்திருக்கும் பிரதீபா குடும்ப பாங்கான முகம், அளவான அழகு மற்றும் நடிப்பு. கிறிஸ்டினா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பவர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
அருள் டி.சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு படத்திற்கு பெரும் அடையாளமாக பயணப்பட்டிருக்கிறது.
இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் காதலை கொண்டா வைத்திருக்கிறது. பின்னணி இசையும் நேர்த்தி.ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமியின் கேமரா, கதாபாத்திரமாக பயணித்திருக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துவதோடு, இரவு நேரக் காட்சிகளையும், அதில் நடக்கும் சம்பவங்களையும் மிக நேர்த்தியாக படமாக்கி பாராட்டு பெறுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் அலெக்ஸ் பாண்டியன், காதல் கதையை உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாடும் விதமாகவும் சொல்லியிருக்கிறார்.
சிறந்த காதல் கவிதையை வாசித்த அனுபவம் ஏற்படுவது போல் காதல் காட்சிகளை படமாக்கியிருக்கும் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன், காதல் கதையை கண்ணியத்துடன் சொல்லி அனைத்து தரப்பு மக்களையும் கொண்டாட வைத்திருக்கிறார்.









