ஹபீபி – விமர்சனம்

ஹபீபி – விமர்சனம் 

 

தமிழில் வெளியான ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகிய படங்களை இயக்கிய மீரா கதிரவன், இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹபீபி’. இயக்​குநர் கஸ்​தூரி ராஜா, மாளவிகா மனோஜ் முக்​கிய வேடங்களில் நடித்​துள்​ளனர். நேசம் என்​டர்​ டெ​யின்​மென்ட் தயாரித்துள்ள இந்​தப் படத்​துக்கு மகேஷ் முத்​து சுவாமி ஒளிப்பதிவு செய்துள்​ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்​ளார.

தென் தமிழகத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலையும், அங்குள்ள இளைஞர்களின் காதலையும், அதனால் ஏற்படும் சமூகப் பிரிவினையையும் அழுத்தமாகப் பேசும் ஒரு யதார்த்தமான படைப்புதான் இப்படம்.

தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத இஸ்லாமிய மக்களின் கலாச்சாரம், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை ஆவணப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

இதுபோல் இஸ்லாமியர்கள் வாழ்க்கையை சொல்ல இதற்கு முன்பாகவும் இதற்குப் பின்பாகவும் ஒரு படம் வருமா என்பது சந்தேகமே.

அறிமுக நாயகன் ஈஷா மற்றும் நாயகி மாளவிகா மனோஜ் ஆகியோரின் நடிப்பு இயல்பாக உள்ளது. மேலும், இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.அவரின் கதாபாத்திரம் மிகவும் மெருகேற்ற பட்டு ஒரு இஸ்லாமியன் இதுபோல் வாழ்ந்தான் என்ற திரைப்படமாக இல்லாமல் திரை காவியமாகக் கொண்டு வந்துள்ளார்.
Malavika Manoj Emerges as the Emotional Soul of Meera Kathiravan's 'Habeebi' Actress Malavika Manoj, who is riding high on the success of her back-to-back films Joe and Aan Paavam Polladhadhu, has quickly

படத்தில் இரண்டாம் பாதியில் வரும் சித்தி கதாபாத்திரமும் கஸ்தூரிராஜா இறந்த பிறகு வரும் சைக்கிள் கடை நண்பரின் கதாபாத்திரமும் படம் பார்க்கும் அனைவரையும் கண்கலங்க செய்யும்.

சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்குப் பெரிய பலம். மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு தென்மாவட்ட கிராமங்களின் அழகை நேர்த்தியாகக் காட்டியுள்ளது.

இசையமைப்பாளர் தனது திரைப்படங்களில் வெவ்வேறு முகமாக முத்திரை பதித்தாலும் இந்த படத்தில் இஸ்லாமியர்களுக்காக தனது இசையை வாரி இறைத்திருக்கிறார்.

கடையநல்லூர் பகுதியைச் சுற்றி 4 காலகட்டங்களில் நடக்கும் கதையை திரைக்கு கடத்துவதில் நேரும் சவால்களை இலாவகமாக வென்றிருக்கிறார் இயக்குநர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் சாலைகள், வீடுகள், கடைகள் என சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்திற்கு பலம். நெசவுத் தொழிலை இஸ்லாமிய மக்கள் மேற்கொள்வது நமக்கு புதிய செய்தியாக இருந்தாலும் அதில் அம்மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிக்கொண்டு வருவதாகட்டும், பொருளாதார மாற்றம் எப்படி குடும்பத்தை மாற்றுகிறது என்பதை எடுத்துரைப்பதாகட்டும் திரைக்கதை உருவாக்கம் நம்மை அக்குடும்பத்தில் ஒருவராக கொண்டு நிறுத்தி விடுவதை மறுக்க முடியாது. கதை நடைபெறும் நிலத்தின் மொழி உச்சரிப்பு தொடங்கி அம்மண்ணின் வாழ்வாதார போக்குகள் வரை கூடுமானவரை சரியாக திரையில் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறது படக்குழு.

குடும்பத்தலைவாக பொறுப்புணர்ந்து வாழும் இடங்களாகட்டும், தனது முடிவு குடும்பத்தை திருப்திப்படுத்தவில்லை என சங்கடப்படும் இடங்களாகட்டும், தன் பிறப்புடனே இருந்த தறி சத்தத்தை இழந்து இருக்கும் பகுதிகளாகட்டும் கஸ்தூரி ராஜா ஒப்புக்கொடுத்துள்ள நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது. சிறுவனாக இருந்து திருமணத்திற்காக ஏங்கும் இடம் வரை ஈசாவின் தவிப்பு கலந்து நடிப்பு திரைக்கு வலுசேர்க்கிறது. கதாநாயகி மாளவிகாவை கொஞ்சம் பேச வைத்திருக்கலாம் என்பதை தவிர்த்து அந்தக் கதாபாத்திரத்தின் மீது குறை ஒன்றுமில்லை. அதிகப்படியான கதாபாத்திரங்களைக் கையாளும்போது அவற்றை சரியாக திரையில் கடத்துவது சவாலானது. அதை திறம்பட செய்திருக்கிறார் இயக்குநர்.
Kasthuri Raja on Habeebi: 'Honest storytelling always finds its audience'

வழக்கமான திரைப்படங்களில் கூட இஸ்லாமியர்கள் ஒன்றிரண்டு கதாபாத்திரங்களாக இதுவரை காட்டப்பட்டிருந்தாலும் அவர்களது வாழ்க்கை, குடும்பசூழல், திருவிழாக்கள், சடங்குகள் என நமது கண்ணில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த அம்சங்கள் அநேகம். இஸ்லாமிய கதாநாயகனை மாப்பிள்ளை என அழைக்கும் இந்துவாகட்டும், தனது மாற்று மத நண்பனுக்காக தவறாமல் கொண்டு செல்லப்படும் கஸ்தூரி ராஜாவின் பிரியாணியாகட்டும் மனிதமும், அன்பும் எவ்வளவு தூய்மையானது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அரசியல் காரணங்களுக்காக எதிரிகளாக முன்னிறுத்தப்படும் மக்களின் மனதில் நிஜமாகவே என்ன குடி கொண்டுள்ளது என்பதை ஹபீபி வெளிச்சமிட்டுக் காட்டும். பயங்கரவாதிகள் எனும் அடைமொழிகளுக்குள் சிறை வைக்கப்பட்ட மக்களின் மனங்கள் எந்தளவு அன்பு நிறைந்தது என்பதை பேச துணிந்திருப்பது இந்தப் படத்தை கொண்டாடப் போதுமான காரணம்.

குடும்பக் கதையானலும் மாறி வரும் இன்றைய தலைமுறைக்கு இது மெதுவாக நகரும் திரைப்படமாக அமைந்திருப்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். எதிர்பாராத அதிர்ச்சியுடன் முடியும் முதல் பாதிக்குப் பின் எந்த ஏற்ற இறக்கமுமற்ற திரைக்கதை சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. ஒரே மாதிரியான நடிப்பு இரண்டாம் பாதியில் நாயகனின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது. அவசியமற்ற இடங்களில் பயன்படுத்தப்படும் ட்ரோன் காட்சிகள், நீளும் திருமண சிக்கல் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.

எனினும் சொல்ல வேண்டிய காலத்தில் சொல்லப்பட வேண்டியவர்களின் கதையை திரைமொழி அனுபவத்தில் தைரியமாகக் கடத்தியதற்கு இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் பாராட்டுகளை தயக்கமின்றி சொல்லலாம்.

இஸ்லாமியர்கள் வாழ்வியலைக் கொண்டு எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்த ஹபீபி இஸ்லாமியர்கள் வாழ்க்கைக்கும் தமிழ் சினிமா வாழ்வியலுக்கும் ஓர் முக்கிய எடுத்துக்காட்டு.

மொத்தத்தில் இந்த ஹபீபி திரைப்படம் தெரியாத உண்மைகளை சொல்லும் வரலாறு.
Next Post

Recent News

error: Content is protected !!