கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், ‘800’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று படமாக ‘800’ உருவாகி இருக்கிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘800’ என்ற தலைப்பில் விளையாட்டு சார்ந்த பிரம்மாண்ட படமாக இதைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதில் முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இந்தப் படத்தை புக்கர் பரிசு (2022) பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலகா இணைந்து எழுதியுள்ளார்.
ஸ்ரீதேவி மூவீஸின் மூத்த டோலிவுட் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் ‘800’ படத்தின் அனைத்து மொழிகளிலும் விநியோக உரிமையை சமீபத்தில் வாங்கினார். தமிழில் உருவாகி இருக்கும் இப்படம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியானதும் இதன் புரோமோஷனல் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்படும். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மைதானத்தில் தனது ஆட்டத்தால் கோடிக்கணக்கான இந்தியர்களை மகிழ்வித்தவர். முரளிதரன், மற்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். ‘800’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது” என்றார்.
மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேலா ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், சரத் லோஹிதாஸ்வா மற்றும் பலர்.