திரில்லர் படத்தில் இணைந்த யாஷிகா ஆனந்த்
டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை தீபாவளி பண்டிகை தினமான நேற்று (அக்டோபர் 31) சென்னையில் நடைபெற்றது.
முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார்.
எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது. விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.