• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

”கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” – ‘சீசா’ தயாரிப்பாளரின் உருக்கமான பேச்சு

by Tamil2daynews
December 16, 2024
in சினிமா செய்திகள்
0
சூது கவ்வும் – 2 விமர்சனம்
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

”கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” – ‘சீசா’ தயாரிப்பாளரின் உருக்கமான பேச்சு

 

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இயக்குநர் குணா சுப்பிரமணியம் பேசுகையில், “எத்தனையோ ஜாம்பவான்களையும், சாதனையாளர்களையும் எழுத்துக்கள் மற்றும் விமர்சனங்களால் உருவாக்கிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் முன்பு நான் இங்கு நிற்பது பெருமையாக இருக்கிறது. இதே பிரசாத் லேபில் பல நிகழ்ச்சிகளை ஒரு ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். இன்று இதே அரங்கில் நான் மேடை ஏறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கடவுள் பக்தி அதிகம். எதுவாக நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய், என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, இந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக நான் ஓடியிருக்கிறேன். என்னிடம் தீமை செயல்கள் அனைத்தும் இருந்தது, அதையெல்லாம் கடந்து இன்று இங்கு நிற்கிறேன். இதற்கு காரணமான சிவன் என் தயாரிப்பாளர், பார்வதியாக அவரது மனைவி சுகுணா மேடம், இவர்களால் தான் இங்கு நிற்கிறேன். தயாரிப்பாளரிடம் ஒரு நோயாளியாக தான் நான் அறிமுகம் ஆனேன். அப்போது அவர் என்னை விசாரித்த போது, என்னைப் பற்றி சொன்னேன். அப்போது அவர் சொன்னார், ஒரு நாள் நாம் பண்ணுவோம். அதில் இருந்து அவரை பின் தொடர்ந்தேன், நம்ம பண்ணலாம் என்று சொன்னார். அந்த நாளில் இருந்து என் வாழ்க்கை தொடங்கியது. கதைப் பற்றி பேசும் போது, வெறும் பொழுதுபோக்கிற்கான படமாக மட்டும் அல்லாமல் சமூகத்திற்கு எதையாவது சொல்ல வேண்டும், என்றார். அதன்படி, அவரே ஒரு கதையும் சொன்னார். அந்த கதை மிக நன்றாக இருந்தது, நிச்சயம் சமூகத்திற்கு தேவையான ஒரு கதை. அதற்கு நான் திரைக்கதை அமைத்தேன். தயாரிப்பாளர் சாருக்கும், மேடமுக்கும் நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

அதேபோல், முகம் தெரியாத எனக்கு முகம் கொடுத்த எங்கள் தலைவன் நட்டி சார். நான் யாரிடமும் முறையாக உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. சில இயக்குநர்களிடம் பயணித்திருக்கிறேன், அவர்களின் படங்களில் சில வேலைகளை நானே செய்து பல விசயங்களை கற்றுக்கொண்டேன். நடிப்பதற்காக தான் நான் போனேன், அப்படி போய் தான் பல விசயங்களை அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அப்படி இருந்த என் மீது நம்பிக்கை வைத்து நட்டி சார் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். உலகத்தில் மோசமானவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், தேடினால் இந்த உலகத்தில் தங்கம், வைரம் கிடைக்கும். அப்படி தான் எனக்கு தங்கமாகவும், வைரமாகவும் கிடைத்தவர் நட்டி சார். அவரது கம்பீரம் எனக்கு பிடிக்கும். அவர் முன்பு எனக்கு பேச்சே வராது. இன்று அவருக்கு பெரிய பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது, அவரை வசதியாக வைத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர் எனக்காக இந்த படத்தில் நடிக்க வந்தார். என்னை டைரக்ட்டரே என்று முதலில் அழைத்தவர் அவர் தான். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அவரை நான் சந்திப்பதற்கு முன்பு நல்ல நடிகராக தான் தெரியும், அவரை சந்தித்த பிறகு அவரை விட நல்ல மனிதர் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள், என்று தோன்றியது. அந்த அளவுக்கு மிக சிறப்பானவர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாது. தம்பி நிஷாந்த் ரூசோ இளம் நடிகர். இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான இடத்தையும் நட்டி சார் கொடுத்தார். அதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நிஷாந்த் ரூசோ நிச்சயம் பெரிய நடிகராக வருவார். நாயகி பாடினி குமார், சிறந்த நடிகை. கிளிசரின் கூட இல்லாமல் நடிக்க கூடிய நடிகை. அவங்க தமிழ் சினிமாவில் நல்ல நிலைக்கு வருவாங்க. மூர்த்தி, ஆர்.எஸ்.ரவி,  தயாரிப்பாளர் ராஜநாயகம், ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள், இவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் மேடையில் இருக்கிறார்கள். கஸ்தூரி ராஜா சாரின், படங்களை பார்த்து நான் அழுவேன், அந்த அளவுக்கு அவரது படங்களில் இருக்கும் செண்டிமெண்ட் பிடிக்கும். நான் நேசித்த, நான் டாப் என்று நினைத்த இயக்குநர்களில் இருக்கும் கஸ்தூரி ராஜா சாரை வரவேற்கிறேன். விஜய் சாரை வைத்து பட்டய கிளப்பிய பேரரசு சாரை வரவேற்கிறேன். சிறிய படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன் சாரை வரவேற்கிறேன். டிரெண்ட் மியூசிக் குழுவுக்கு நன்றி. என் படத்திற்கு தூணாக இருந்து என்னை இயக்கிய அக்கறை பாலு சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் சரண் குமார் பேசுகையில், “சீசா ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படம். நட்டி சாருடன் முதல் முறையாக பணியாற்றியிருக்கிறேன். அவர் போலீஸ் வேடத்தில் நிறைய நடித்துவிட்டார். இந்த படத்தில் அது வித்தியாசமாக இருக்கும். நிஷாந்த் ரூசோ சிறப்பாக நடித்திருக்கிறார். பாடினி நல்ல நடிகை மற்றும் நடனக் கலைஞர், அவரும் நன்றாக நடித்திருக்கிறார். இயக்குநர் குணா சாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு குழுவை சிறப்பாக கையாளும் திறன் படைத்தவர். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களிடம் வேலை வாங்கினார். தயாரிப்பாளர் சார் எனக்கு பணியாற்றுவதில், பொருளாதாரத்தில் சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்ட அனைத்தையும் செய்துக்கொடுத்தார், அவருக்கு நன்றி. நீங்க கேட்ட மூன்று பாடல்களையும் அவர் தான் எழுதியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களை வெளியிட்ட டிரெண்ட் மியூசிக் குழுவுக்கு நன்றி.” என்றார்.

நடிகர் நிஷாந்த் ரூசோ பேசுகையில், “இயக்குநர் குணா சார் என்னை சந்தித்து இந்த கதையை சொல்லும் போது, நிச்சயம் என்னால் நடிக்க முடியாது, என்று சொன்னேன். அந்த அளவுக்கு என் கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஒரே கதாபாத்திரத்தில் மூன்று விதமான வித்தியாசங்களை காட்டி நடிக்க கூடியதாக இருந்தது. என்னை வைத்து காமெடி பண்ணிடாதீங்க சார், என்று சொன்னேன். இல்லங்க, நீங்க நடிச்ச படத்தை பார்த்திருக்கிறேன், நிச்சயம் உங்களால் நன்றாக செய்ய முடியும், என்று நம்பிக்கை கொடுத்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நான் நடித்தேன், அவருக்கு நன்றி. நன்றாக வந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். என்னுடன் நடித்த பாடினி, மூர்த்தி ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நட்டி சார் எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தார், அவருக்கு நன்றி. படம் ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகிறது. நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும், நன்றி.” என்றார்.

நடிகை பாடினி குமார் பேசுகையில், “எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. குணா சார் என்னிடம் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது சாதாரணமாக தான் உட்கார்ந்திருந்தேன், ஆனால் அவர் கதை சொல்ல சொல்ல நான் இருக்கையின் நுணிக்கு வந்து விட்டேன். அந்த அளவுக்கு கதை அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படமும் அப்படி தான் இருக்கும், கடைசி வரைக்கும் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் திரில்லிங்காக படம் நகரும். தயாரிப்பாளர் சார் என் மீது நம்பிக்கை வைத்து என்னை தேர்வு செய்தார், அவருக்கு நன்றி. நட்டி சாருடன் நான் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை, இருந்தாலும் அவர் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. என்னுடன் இணைந்து நடித்த நிஷாந்த் ரூரோ எனக்கு சப்போர்ட்டிங்காக இருந்தார், அவருக்கு நன்றி. உங்க அனைவருக்கும் எதிர்பார்ப்பை கொடுக்க கூடிய படமாக இருக்கும் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.

நடிகர் ஆதேஷ் பாலா பேசுகையில், “நண்பன் ஆனந்துக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும், நான் இந்த படத்தில் நடிக்க அவர் தான் காரணம். எனக்கு போலீஸ் வேடம் வந்தால் தவிர்த்து விடுவேன். எதாவது சிறிய வேடமாக இருந்தால் கூட பண்ணுகிறேன், போலீஸ் வேடம் மட்டும் பண்ண மாட்டேன், என்று சொல்லி விடுவேன். அப்படிப்பட்ட நான் போலீஸ் வேடத்தில் நடிக்க நட்டி சார் தான் காரணம். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும், என்று சொன்ன உடன் நான் சம்மதித்து விட்டேன். அவருடன் படம் முழுவதும் வருகிறேன், அவர் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததோடு, நிறைய இடம் கொடுத்தார், அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஒப்பந்தமான போது, எனக்கு கொஞ்சம் தொப்பை இருந்தது. அதனால் தயாரிப்பாளர் சற்று தயங்கியதாக நண்பர் சொன்னார். படப்பிடிப்பு தொடங்க ஆறு நாட்கள் மட்டுமே இருந்தது. அந்த ஆறு நாட்களில், கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தேன். படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் என்னையும், எனது நடிப்பையும் பார்த்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திருப்தியாகி விட்டார்கள், என்று சொன்னார்கள். இது அனைத்து நடிகர்களும் செய்வது தான் என்றாலும், இந்த படத்தில் நட்டி சாருடன் நடிக்க போகிறோம் என்பதால், எந்த விதத்திலும் இந்த படத்தை கைவிட்டு விடக்கூடாது, என்று நினைத்தேன். அதனால் தான் அந்த அளவுக்கு கடுமையாக உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தேன். குணா சார் எனக்கு ஃபேஸ்புக் மூலம் நட்பானவர். சுகுணா மேடம் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. மிக சிறப்பான தயாரிப்பாளர், அவர்கள் மனதுக்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும். இந்த படக்குழு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணித்தது. என்னுடன் நடித்த நிஷாந்த் ரூசோவுக்கு நன்றி. இங்கு மேடையில் இருக்கும் ஜாம்பவான்கள் எனக்கு கொடுக்கும் நம்பிக்கையால் தான் இப்போதும் சினிமாவில் உற்சாகமாக பயணிக்கிறேன். ஒரு நடிகனாக எனக்கு இன்னும் பெரிய பெரிய மேடைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சீசா மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

எடிட்டர் வில்சி ஜெ.சசி பேசுகையில், “படம் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் சப்போர்ட் எங்களுக்கு தேவை. ஜனவரி 3 ஆம் தேதி படம் வெளியாகிறது, நீங்க சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

இயக்குநர் மைக்கேல் பேசுகையில், “எனக்கு இது இரண்டாவது மேடை. பாடல்கள் மற்றும் டிரைலர் மிக சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளரின் பணி சிறப்பாக இருந்தது. இயக்குநர் குணாவுக்கு வாழ்த்துகள். நான் ஒரு சிறிய படம் எடுத்துவிட்டு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க ரொம்பவே கஷ்ட்டப்பட்டேன். பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பு உடனே கிடைத்தால் நன்றாக இருக்கும். படம் தியேட்டரில் இருக்கும் போதே உங்களுடைய ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும், ஒடிடிக்கு வந்த பிறகு கிடைப்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, இந்த படத்திற்கு பத்திரிகையாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் அரவிந்தராஜ் பேசுகையில், “சீசா அற்புதமான படம். இயக்குநர் குணா எனக்கு சகோதரர் போல, அவர் எனக்கு இந்த படத்தில் ஒரு மாறுபட்ட வேடம் கொடுத்திருக்கிறார். இந்த கதை இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் தேவையான விசயம் கொண்டது. ஒரு அற்புதமான விசயம், நாட்டுக்கு தேவையான விசயத்தை அழகாக வடிவமைத்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். நட்டி சாருடன் முதல் முறையாக நடித்திருக்கிறேன். இயக்குநர் குணா அதிகம் மெனக்கெட்டு நன்றாக செய்திருக்கிறார். நாயகி பாடினி பெயரே எனக்கு பிடித்து விட்டது, அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் இந்த படத்திற்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள், என்று நான் நம்புகிறேன், அந்த அளவுக்கு படத்தில் விசயம் இருக்கிறது. படம் வெளியாகும் தருணமும் நன்றாக இருக்கிறது, அதனால் படம் நிச்சயம் வெற்றி பெறும். சிறிய படம், பெரிய படம் இல்லாமல் இது மிக சிறப்பான படமாக இருக்கும். தயாரிப்பாளர் செந்தில் வேலன் சாருக்கு என் நன்றி, அற்புதமான டீமை தேர்ந்தெடுந்தார். ரூசோ அற்புதமான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள், படம் நிச்சயம் சிறப்பாக வந்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “சிறிய படங்களை வாழ்த்துவதற்கு பெரிய மனசு வேண்டும். அப்படி இந்த படத்தை வாழ்த்த நேரம் ஒதுக்கி இங்கு வந்திருக்கும் கே.ராஜன் சார், கஸ்தூரி ராஜா சார் ஆகியோருக்கு நன்றி. திரையுலகில் வாரி என்று  இருக்கு. அரசியலில் வாரிசு ஜெயிப்பது ஈஸி, பணம் இருந்தால் போதும். ஆனால், திரையுலகில் வாரிகள் ஜெயிக்க திறமை வேண்டும். அறிமுகம் எளிமையாக இருக்கும், ஆனால் நிலைத்து நிற்க திறமை தான் வேண்டும். கஸ்தூரி ராஜா சாரின் மகன்கள் என்பதால் செல்வராகவன் இயக்குநராகவும், தனுஷ் நடிகராகவும் அறிமுகம் ஆகலாம். ஆனால், அவர்கள் இன்று முன்னணியில் இருப்பதற்கு அவர்களின் திறமை தான் காரணம். அதேபோல், திறமை மட்டும் போதாது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வேண்டும். ஒரு படம், இரண்டு படங்களுக்கு பிறகு அப்பா பெயரை மறந்துவிட்டு, நம்ம ஜெயிக்க வேண்டும், பெரிய இடத்துக்கு போக வேண்டும் என்ற வெறி வேண்டும், அந்த வெறி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அதனால், சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது சாதாரண விசயம் இல்லை, அப்படிப்பட்ட இரண்டு பேரை கொடுத்த கஸ்தூரி ராஜா சாருக்கு நன்றி.

சீசா என்பது ஒரு விளையாட்டு, அது அனைவருக்கும் தெரியும். நிறைய பூங்காக்களில் சீசா இருக்கும். விளையாட்டுக்களிலேயே சிறந்த விளையாட்டு சீசா தான். மற்ற விளையாட்டுகளில் தோற்பவர்களை பார்த்து ரசிப்பார்கள். ஆனால், இந்த விளையாட்டில் தோற்பவரை பார்த்து வெற்றி பெற்றவர் ரசிப்பர், அதே சமயம், வெற்றி பெற்றவர் தோற்பார், ஏறும், இறங்கும். அப்படிப்பட்ட விளையாட்டின் பெயரை தலைப்பாக வைத்து இயக்குநராக அறிமுகமாகும் குணாவுக்கு இனி எல்லாமே ஏற்றம் தான். அவரிடம் எனக்கு பிடித்த விசயம் கடவுள் பக்தி. இயக்குநராக முயற்சிக்கும் போது, ஒரு தயாரிப்பாளரை சந்தித்து கதை சொல்லி, அவரை பல வருடங்களாக பின் தொடர்ந்து வாய்ப்பு பெற்று படம் செய்தால் அது முயற்சி. ஆனால், எங்கேயோ இருக்கும் டாக்டர் செந்தில் வேலனை ஒரு நோயாளியாக சந்திக்க, இவரைப் பற்றி அவர் விசாரித்து தெரிந்துக்கொண்டதோடு அல்லாமல் அவருக்காக படம் தயாரிக்க முன் வந்திருக்கிறார் என்றால் இது முயற்சி அல்ல கடவுள் செயல். குணா பேசும் போது சிவனாக செந்தில் வேலனை பார்ப்பதாகவும், சக்தியாக சுகுணா மேடமை பார்க்கிறேன் என்றார். அது உண்மை தான், நமக்கு உதவியவர்களை தெய்வமாக பார்ப்பவர்கள் என்றுமே தோற்க மாட்டார்கள். அதனால் குணா நிச்சயம் வெற்றி பெறுவார்.

தயாரிப்பாளர் செந்தில் வேலன் ஒரு மருத்துவராக இருந்தாலும் அவரிடம் ஒரு கதையாசிரியர் இருந்திருக்கிறார், ஒரு பாடலாசிரியர் இருந்திருக்கிறார். நம்ம அனைவரிடமும் ஒரு கதை இருக்கும், ஆனால் அதை அவர்கள் கதையாக பார்க்க மாட்டார்கள், பிரச்சனையாக பார்ப்பார்கள். ஆனால் டாக்டர் தான் அவரது பிரச்சனைகளை கதையாக பார்த்திருக்கிறார். நமக்குள்ள இருக்கும் பிரச்சனைகளை கதையாக நினைத்து பார்த்தால், மன அழுத்தம் போன்றவை வராது. எனவே, நமக்கு நல்ல கதையாசிரியர் மற்றும் பாடலாசிரியர் கிடைத்திருக்கிறார். நானும் தான் பாடல்கள் எழுதுவேன், ஆனால் நான் பல வருடங்களாக சினிமாவில் இருந்து, அதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு எழுதினேன். ஆனால், செந்தில் வேலன் சார் வேறு ஒரு துறையில் இருந்து பாடல் எழுதியிருப்பது பெரிய விசயம். கதை எழுதுவது ஈஸி, பாடல்கள் எழுதுவது கஷ்ட்டம். அதிலும், அப்போது இருந்த இசையமைப்பாளர்களின் இசைக்கு பாடல்கள் எழுதுவது சுலபமாக இருந்தது. ஆனால், தற்போதைய இசையமைப்பாளர்களின் இசைக்கு பாடல்கள் எழுதுவது மிகவும் கஷ்ட்டம், அந்த அளவுக்கு அவர்கள் இசை எக்குதப்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில், மிக அருமையான பாடல்கள் எழுதியிருக்கிறார் என்றால் செந்தில் வேலன் சாரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.  அதில் ஒரு வரி சிறப்பாக இருந்தது. இந்த பூவுலகத்தில் முதல் தலைவன் தமிழன் தான், மிக அற்புதமான வரி.

படத்தின் கதாநாயகன் நட்டி சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை ஒப்பிட்டு சொல்லலாம். விஜய் சாருக்கு சம்பளம் 100 கோடி, 200 கோடி என்று சொல்கிறார்கள், அந்த சம்பளத்தை விட்டுவிட்டு அவர் இன்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அதுபோல் தான் நட்டியும். அவர் பெரிய கேமராமேன், அவர் இந்தி சினிமாவுக்கு சென்றால் அவருக்கு பல கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், அதை விட்டுவிட்டு நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறார். இன்றும் 5 கோடி ரூபாய் கொடுத்து ஒளிப்பதிவு செய்ய கூப்பிட்டாலும், 50 லட்சம் ரூபாய் கொடுத்து நடிக்க கூப்பிட்டால் அதுக்கு தான் போகிறார். என்னடா மனுஷன் இவ்வளவு வாய்ப்புகளை விட்டுவிட்டு நடிக்க வருகிறாரே, என்று யோசித்திருக்கிறேன். பிறகு தான் தெரிந்தது அவரது மனசுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். வெறும் பணத்தை மட்டுமே பார்க்காமல் மனதுக்கு பிடித்த விசயத்தை செய்ய வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்து நடிக்கிறார். அதேபோல் அவரிடம் பிடித்த விசயம், பெரிய இயக்குநர், சிறிய இயக்குநர், பெரிய தயாரிப்பாளர் என்று பார்க்க மாட்டார், யார் அவரை அணுகினாலும் கதை நன்றாக இருந்தால் நடிப்பார். அவர் இந்த கதைக்காக மட்டுமே நடித்திருக்க மாட்டார், இயக்குநர் குணாவின் நல்ல குணத்தை பார்த்து தான் நடிக்க சம்மதித்திருப்பார், என்று நினைக்கிறேன்.

இந்த படக்குழுவை பார்க்கும் போது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி தெரிகிறது. திறமை உள்ள இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற வெறி தயாரிப்பாளரிடம் தெரிகிறது. அதேபோல், படத்தை நல்லபடியாக இயக்கி தயாரிப்பாளருக்கு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற வெறி இயக்குநர் குணாவிடம் தெரிகிறது. படத்தில் நடித்த ரூசோ, பாடினி, ஆதேஷ் பாலா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனவே, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, மொத்த குழுவும் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும். தயாரிப்பாளர் செந்தில் வேலன் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டும், எங்களைப் போன்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” எண்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், “ஒரு படத்தை ஆக்குவதும், உருவாக்குவதும் மீடியாக்கள் கையில் தான் இருக்கிறது. இப்போது என் பேரன் கூட நடிக்க வந்திருக்கிறார், இந்த அளவுக்கு என் குடும்பம் சினிமாவில் உயர்ந்ததற்கு மீடியாக்கள் தான் காரணம். முதலில் இங்கு நன்றி சொல்ல வேண்டியது தயாரிப்பாளர் செந்தில் வேலனுக்கு தான். ஒரு தயாரிப்பாளர் திடீரென்று மருத்துவம் பார்க்க முடியாது, ஆனால் ஒரு மருத்துவர் படம் தயாரித்திருக்கிறார். இன்றைய சுழலில் ஒரு படம் தயாரிப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அனைத்தும் இருப்பவர்களால் கூட இன்று படம் தயாரிப்பு என்பது கஷ்ட்டமான விசயமாக இருக்கிறது. எதுவுமே இல்லாமல், இவ்வளவு முதலீடு செய்து, படத்தை இந்த அளவுக்கு கொண்டு வருவதற்கு அவர் எத்தனை கஷ்ட்டங்களை கடந்து வந்திருப்பார், என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். பாடல்கள் நன்றாக இருக்கிறது, இசை, பாடல் வரிகள் என அனைத்தும் நன்றாக இருக்கிறது, எனவே பத்திரிகையாளர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த படம் வெற்றி பெற்று டாக்டர் சம்பாதித்தால், நிச்சயம் அடுத்த படம் எடுப்பார், அதில் எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புகிறேன்.

இயக்குநர் குணா குடும்ப கஷ்ட்டத்தை பற்றி பேசினார். சினிமாவில் இருப்பவர்களை கோழையாக்குவது குடும்ப கஷ்ட்டம் தான். ஓட்டப் பந்தயத்தில் முதுகில் மூட்டையை கட்டிக்கொண்டு ஓடுவது போல தான் சினிமாக்காரர்களுக்கு குடும்பம் இருப்பது. நானும் அந்த கஷ்ட்டத்தை அனுபவித்திருக்கிறேன். அதே சமயம், சினிமா தன்னை தானே ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதற்கு தகுதியானவரை அது தானாக தேர்ந்தெடுக்கும். அப்படிதான் நானும் சினிமாவுக்குள் வந்தேன். கிராமத்தை சேர்ந்த நான் சென்னை என்றால் என்ன?, யாரை பார்க்க வேண்டும், என்று எதுவுமே தெரியாமல் சென்னை வந்தேன். சென்னை வந்து வண்ணாரப்பேட்டை சென்றதும் நான் இறங்கிய இடம் மகாராணி தியேட்டர். அங்கிருந்து நான் போக வேண்டிய முகவரியை தேடிய போது திரும்ப திரும்ப அந்த தியேட்டர் முன்பே வந்து நின்றேன். ஒரு தாய் வயிற்றில் இருந்து எப்படி பிறந்தோமோ அப்படி தான் நான் சென்னை வந்தேன். என் கண் முன் தெரிந்த அந்த மகாராணி தியேட்டர் தான் நான் சினிமாவில் வருவதற்கான முதல் சிக்னல் என்று இன்றும் நினைப்பேன். அதனால், உழைப்பும், சோர்வின்மையும் நம்மிடம் இருந்தால் நம்மை எந்த கொம்பனும் அசைக்க முடியாது. நம்முடைய நாற்காலியில் யாராலும் உட்கார முடியாது. அப்போது கூட நான் வேறு வேலைகளை தான் தேடி அலைந்தேனே தவிர சினிமாவில் வாய்ப்பு தேடவில்லை. அப்படி இருந்தும் சினிமா என்னை அழைத்தது. சினிமாவில் இருக்கும் வசதிகள் எங்கும் இல்லை, அதே சினிமாவுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோமா?, இன்றும் என் பிள்ளைகள் என்னை படம் எடுக்க சொல்கிறார்கள், நான் தான் வேண்டாம் என்று சொல்கிறேன். ஒரு தயாரிப்பாளர் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டால் தான், அந்த படத்தில் பணியாற்றியவர்கள் சந்தோஷமடைகிறார்கள். 50 லட்சம் ரூபாய் செலவு செய்தால், அதில் 15 லட்சம் தான் படத்திற்கு செலவு செய்யப்படும் நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் செந்தில் வேலன் தைரியமாக படம் தயாரித்திருக்கிறார், அவரை பாராட்ட வேண்டும். சிறிய படம், பெரிய படம் என்று இப்போது சொல்லக் கூடாது, தியேட்டருக்கு வந்தால் தான் தெரியும். இப்போது பல பெரிய படங்கள் சின்ன படங்களாகி விட்டது, சிறிய படங்கள் பெரிய படங்களாகி விட்டது. இசையமைப்பாளர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார், செந்தில் வேலனின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

இயக்குநர் குணா குடும்பம் இருக்கிறது, என்று வருத்தமடைய வேண்டாம். நீங்க பட்ட கஷ்ட்டத்துக்கு நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நானும் 39 வயதில் தான் என் முதல் படம் எடுத்தேன். எனக்கு இளையராஜா என்ற ஒரு தெய்வம் கிடைத்தார். ராஜ்கிரண் என்ற இஸ்லாமிய கடவுள் எனக்கு வரம் கொடுத்தார். இதையெல்லாம் மீறி அந்த படத்தை ரசிக்கும் ஆடியன்ஸ் இருந்தார்கள். ஆனால், இன்று அந்த படத்தை எடுத்தால் ஓடாது. இன்றைய ஆடியன்ஸ்களுக்கு என்ன தேவையோ அதை படமாக எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறும். அதனால் நீங்க பயப்பட வேண்டாம், படம் நிச்சயம் வெற்றி பெறும். பத்திரிகையாளர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.” என்றார்.

கே.ராஜன் பேசுகையில், “சின்ன படங்கள் பெரிய படங்களாக வேண்டும், அதற்காக இதுபோன்ற படங்களை வாழ்த்த வேண்டும், என்பதால் தான் இங்கே நான் வந்திருக்கிறேன். தயாரிப்பாளர் ஒரு மருத்துவர், அவர் அந்த வேலையை மட்டும் பார்க்காமல், கதை, கவிதை எழுதும் வேலையையும் சேர்த்து பார்த்திருக்கிறார். இயக்குநர் குணா நோயாளியாக சென்ற போது அவரை பற்றி தெரிந்துக் கொண்டு, இந்த படம் தயாரித்திருக்கிறார். இன்று இந்த உலகத்தில் எவ்வளவோ பார்க்கிறோம், துரோகம் செய்வதை தான் அதிகம் பார்க்கிறோம். ஆனால், நோய் தீர்க்க போனவரின் நோயை தீர்த்து, அவரது மனம் அறிந்து அவருக்காக படம் தயாரித்த செந்தில் வேலன் சிறப்பாக வாழ வேண்டும், என்று வாழ்த்துகிறேன். அவர் ஒரு தெய்வ பிறவியாக குணாவுக்கு கிடைத்திருக்கிறார். அனைத்தையும் பாசிட்டிவாக நினைக்க வேண்டும். நாம் வளர வேண்டும், நீங்க வளர வேண்டும், நாடு வளர வேண்டும் என்று நினைக்க வேண்டும், அப்போது தான் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும். எனவே, இந்த சிறிய படம் பெரிய படமாக வேண்டும், என்று இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஜே.செந்தில் வேலன் பேசுகையில், “நான் சினிமா துறைக்கு புதியவன். எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். 12ம் வகுப்பு படிக்கும் வரை மொத்தமாக நான்கு திரைப்படங்கள் தான் பார்த்திருக்கிறேன். கல்லூரி சென்ற போது தான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. என் கேரில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள், காலை 9 மணிக்கு மருத்துவமனை சென்றால் இரவு 12 மணி வரை பணியாற்றுவேன். இந்த படத்தின் கதை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்திலும் என் பங்களிப்பு இருக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சினிமா வேலையை பார்க்கிறேன்.  ஜனவரி 3 எப்போது வரும் என்று என் மனைவி எதிர்பார்க்கிறார், அப்போதாவது நான் பழையபடி இருப்பேன் என்பதால் தான்.

நீங்கள் நினைப்பது போல் சினிமா சாதாரணமான வேலை கிடையாது. கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது. அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறார்கள், 6 மணிக்கு வண்டி பிடித்து படப்பிடிப்புக்கு செல்கிறார்கள். லைட் மேன் உள்ளிட்ட உதவியாளர்கள் மிக கடுமையாக உழைக்கிறார்கள். இவர்கள் மனிதர்களா மிஷன்களா என்று தெரியாத அளவுக்கு மிக கடுமையாக வேலை செய்கிறார்கள்.  ஆனால், நமக்கு இந்த கஷ்ட்டங்கள் எதுவுமே தெரியவில்லை. சினிமா என்றால் ஜாலி, ஒரே கூத்து கும்பாளமாக இருக்கும் என்று நினைக்கிறோம். கதை விவாதம் எடுத்துக் கொண்டால் கூட செத்து சுண்ணாம்பாகி விடுகிறோம். ஒரு படம் எடுக்கவே எனக்கு இப்படி இருக்கிறதே, மேடையில் இருப்பவர்கள் இத்தனை படங்களை எப்படி தான் எடுத்தார்களோ.

இயக்குநர் குணா குடிபோதைக்கு அடிமையாகி என்னிடம் வந்தார். அவர் யார் சொல்வதையும் கேட்காத ஒரு நிலையில் இருந்தார். 8 வயதில் ஆர்ம்பித்த சினிமா ஆசையால் அவர் பல தோல்விகளை சந்தித்து, எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். அவர் முதல் முறையாக மற்றவர் சொல்வதை கேட்டது என்னிடம் தான். அப்போது என்னிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது, நீங்க சொல்வதை நான் கேட்கிறேன், என்று சொன்னவர். இதை இந்த அறையில் மட்டும் செய்யாமல் அனைவரும் கேட்கும்படி செய்ய வேண்டும் என்று சொன்னார். அதற்காக என்னை வைத்து ஒரு வீடியோ எடுத்தார். அந்த வீடியோவுக்காக லொக்கேஷன், எனக்கு மேக்கப் என்று என்ன என்னவோ செய்து எடுத்தார். அந்த வீடியோவை பார்த்து நான் பிரமித்து விட்டேன், அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. அந்த வீடியோ தான் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு ஒரு குறும்படம் எடுத்தோம், அனைத்தையும் மென்மையாக சொல்லக்கூடியவர். பிறகு படம் எடுக்கலாம் என்று சொல்லி, என்னிடம் தொடர்பில் இருந்தார். படம் தொடங்கலாம் என்று நான் சொன்ன பிறகு பதற்றமடைந்து விட்டார், அதனாலேயே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது. உடனே அவரை அழைத்து, எந்த காலத்திலும் என் காசை ஏமாற்றி விட்டதாக சொல்ல மாட்டேன். படம் ஜெயிக்க வில்லை என்றால் நமக்கு அதிஷ்ட்டம் இல்லை என்று நினைத்துக் கொள்வோம். தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை, அதனால் எந்தவித பதற்றமும் இன்றி இந்த படத்தை பண்ணுங்க, என்று சொன்னேன். எனக்கு செலவு வைக்க கூடாது என்று கடந்த மூன்று மாதங்களாக இட்லியும், தயிர் சாதமும் தான் சாப்பிடுகிறார், நானும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. தயாரிப்பாளருக்கு செலவு வைக்க கூடாது என்று இப்படி செய்கிறார். நட்டி சாரை இயக்க வேண்டும் என்பது அவரது ஆசை, ஆனால் அவர் ஒகே சொன்னவுடன் பதற்றமடைந்து விட்டார். அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அந்த நிலையிலேயே படம் எடுத்தார். குணா எப்படிப்பட்டவர் என்றால் சினிமாவுக்காக சாக கூடியவர். ஐந்து பைசா கூட எதிர்ப்பார்க்காமல் சினிமாவுக்காக வாழும் ஒரு நபர் அவர். நானும் இந்த சமூகத்தில் இருந்து தான் முன்னேறியிருக்கிறேன். அப்படிப்பட்ட சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதால் தான் நான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன்.  நாங்கள் இணைந்து சிறிய வீடு கட்டியிருக்கிறோம், அதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேடுக்கொள்கிறேன்.

நடிகர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நட்டி சார் மிக சிறந்த மனிதர். அவர் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். கேரவேன் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை, ரோட்டில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அவர் ஒரு தயாரிப்பாளரின் நடிகர் என்று தான் சொல்ல வேண்டும். நிஷாந்த், பாடினி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளரை கசக்கி பிழிச்சி காயப்போட்டிருக்கிறேன். என் இசையமைப்பாளர் திறமையானவர், ஆனால் நாம் கேட்கும் போது பாடல்கள் கொடுக்க மாட்டார். தீபாவளிக்கு பேண்ட் கேட்டால் பொங்கலுக்கு தான் கொடுப்பார், அது ஒன்று தான் அவரது பிரச்சனை. மற்றபடி சிறந்த இசையமைப்பாளர் அவர், எம்.எஸ்.வி உடன் அவரை ஒப்பிடலாம் அந்த அளவுக்கு சிறந்த இசையமைப்பாளர். இவர்களுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணுவேன். ஆறு கதைகள் வைத்திருக்கிறேன், அதில் ஒன்றில் மீண்டும் நட்டி சார் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில், வெற்றி தோல்வியை பார்த்து நானும், இயக்குநரும் பயப்பட போவதில்லை. நிச்சயம் தொடர்ந்து படம் பண்ணுவோம், நன்றி.” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், “இந்த படத்திற்காக நான் இயக்குநர் குணாவை சந்தித்த போது, அவர் ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். கதையில் அவர் மருத்துவம் சார்ந்த பல விசயங்களை மிக சரியாக கையாண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இந்த கதையை புடிச்சீங்க, என்று கேட்டேன். அப்போது தான் அவர் தயாரிப்பாளர் தான் கதை எழுதியதாக சொன்னார். அந்த கதையை அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடியாது, யோசிக்க முடியாது. பைபோல் டிசாடர் என்பது எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதை மிக சரியாக கதையில் கையாண்டிருக்கிறார்கள். இயக்குநர் குணா உடல்நிலை பாதிக்கப்படும் போது கூட மன சிதைவு எத்தகைய நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை இதுவரை யாரும் கையாண்டதில்லை. சில  படங்களில் லேசாக சொல்லியிருந்தாலும், இந்த படத்தில் அதை மிக சிறப்பாக முழுமையாக செய்திருக்கிறார்கள். செந்தில் வேலன் சார் வைத்திருக்கும் ஆறு கதைகளிலும் நடிக்க  நான் ரெடியாக இருக்கிறேன். நான் பல படங்களில் போலீஸாக நடித்திருக்கிறேன், ஆனால் இந்த படத்தின் போலீஸ் வேடத்தை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார்கள், அதற்கு கதை எழுதியிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் குணா பல திறமைகள் கொண்டவர். அவர் ஒரு ஓவியர், கவிதை எழுதுவார், நடனம் ஆடுகிறார், அவர் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார். என்னுடன் இணைந்து நடித்த ரூசோ சிறந்த நடிகர். அவர் நடித்த வேடம் எனக்கு கொடுத்திருந்தால் தெறித்து ஓடியிருப்பேன். அந்த அளவுக்கு கஷ்ட்டமான வேடம் அது, அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை பாடினியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை, ஆனால் அவரது காட்சிகளை பார்த்து மிரண்டு விட்டேன், ஒரே ஷாட்டில் அந்த காட்சிகளில் நடித்ததாக சொன்னார்கள், சிறப்பாக இருந்தது.

இந்த படத்தை வாழ்த்த வந்த கஸ்தூரி ராஜா சார், கே.ராஜன் சார், இயக்குநர் மைக்கேல், பேரரசு சார் ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் சிறப்பான பாடல்கள் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் பேசும் போது, தீபாவளி ஃபேண்ட் கேட்டால் பொங்கலுக்கு கொடுப்பதாக சொன்னார். ஆனால், இந்த கதையை புரிந்துக்கொண்டு இசையமைப்பது ரொம்ப கஷ்ட்டம், அதற்கு காலதாமதம் நிச்சயம் ஆகும். சுகுணா மேடமுக்கு சினிமா புதிது என்றாலும் ஒரு வாரத்தில் அதை கற்றுக்கொண்டார். இங்கு என்ன நடக்கிறது, எப்படி கையாள வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றினார் அவருக்கு நன்றி. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் குணா படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது, நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இசை குறுந்தகட்டை இயக்குநர் கஸ்தூரி ராஜா வெளியிட கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
Previous Post

” அம்பி ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விண்வெளி நாயகன் கமலஹாசன்

Next Post

வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் அவர்களின் முதல் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .

Next Post
சூது கவ்வும் – 2 விமர்சனம்

வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் அவர்களின் முதல் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .

Popular News

  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘போட்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வெப்பம் குளிர் மழை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 50 லட்சம் செலவில் ‘பங்களா’ செட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.