போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்
1990-களில் கதை நகரும்படியாக படம் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் அருகே போத்தனூர் என்ற ஊரில் தபால் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. அந்த தபால் நிலையத்தின் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார் நாயகனின் தந்தை.தனியாக கம்ப்யூட்டர் பிசினஸ் ஆரம்பிக்க, லோனுக்காக ஒவ்வொரு வங்கியிலும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார் நாயகன் பிரவீன்.
ஒரு வங்கியில் லோன் ரெடியாகும் சமயத்தில், கடைசி நேரத்தில் அந்த லோன் ரத்தாகி போகிறது. என்ன செய்வது என்றறியாது நிற்கிறார் நாயகன்.இச்சமயத்தில், போத்தனூர் தபால் நிலையத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதால், அது அங்கு இருப்பது பாதுகாப்பாக இருக்காது என்றெண்ணி, அந்த பணத்தை தனது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார் நாயகன் பிரவீனின் தந்தை.
செல்லும் வழியில் அந்த பணத்தை தவறவிட்டுவிடுகிறார். சனிக்கிழமை என்பதால், திங்கட்கிழமை கட்டாயம் 7 லட்சம் ரூபாயை தபால்நிலையத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் இல்லாவிட்டால் ஜெயிலுக்கு செல்லும் நிலை வந்துவிடுமே என்றெண்னி புலம்புகிறார் பிரவீனின் தந்தை.தந்தையை காப்பாற்ற வேண்டும், தானும் வாழ்வில் செட்டில் ஆக வேண்டும் இந்த இரண்டையும் மனதில் கொண்டு நாயகன் ஆடும் ஆட்டமே இந்த “போத்தனூர் தபால் நிலையம்” படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். படத்தின் கதையோடு கதாபாத்திரமாக ஒன்றியிருக்கிறார் ப்ரவீன். யதார்த்த நடிகராக அனைவரையும் கவர்ந்திருக்கிறார் பிரவீன்.நாயகி அஞ்சலி ராவ், தனது கண்களால் ரசிக்க வைக்கிறார். மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கதையோடு ஒன்றி நம்மையும் பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள்.
தென்மா இசையில் பின்னணி இசை கதையோடு பயணம் புரிய வைத்திருக்கிறார். சுகுமாரன் சுந்தரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.. 1990 களில் வீடுகள், தெருக்கள், அலுவலகம் என அனைத்தும் எப்படி இருக்குமோ அப்படியே காட்சியமைத்து நம்மையும் கதையோடு இழுத்துச் சென்றிருக்கிறார்.
படத்தின் முதல் பாதி சற்று தொய்வாக சென்றாலும், இரண்டாம் பாதி டாப் கியர் போட்டு நகர்கிறது.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாதபடி கதையை அருமையாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் பிரவீன்.அடுத்த பாகத்திற்கான பல ட்விஸ்டுகளை இறுதியில் வைத்து, அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பையும் கிளப்பிவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர்.