விஷால் வெங்கட் இயக்கத்தில் ‘குரல் நாயகன்’ அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பாம்.
கெம்ரியோ பிக்ச்சர் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளார்கள். ஒரு கிராமம் சாதியின் அடிப்படையில் இரண்டாக பிரிந்து கிடக்கிறது. தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு அதிகாரிகள் சமரசம் செய்ய முயற்சி செய்தும் பயன் இல்லை. இவர்களின் மோதலை பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் நாசர். இந்த கிராமத்தில் உள்ள முக்கிய நபராக இருக்கும் காளி வெங்கட் இந்த மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார். இவரது நண்பர் அர்ஜுன் தாஸ். எதிர்பாராத விதமாக காளி வெங்கட் இறந்து விடுகிறார். இவரது உடலில் சில மாற்றங்கள் தென்படுவதை பார்க்கும் அர்ஜுன் தாஸ் “நண்பன் இறக்க வில்லை” என்கிறார்.

படத்தின் முதல் பாதி நார்மலாகவும், இரண்டாம் பாதி மிக சிறப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் மிக அருமையாக இருக்கிறது. தன்னால் தான் தனது நண்பனுக்கு தண்டனை கிடைத்தது என்று வருந்தும் சிறுவன், சிறுவர்கள் கையில் கட்டி இருக்கும் ஜாதி கயிரை தூக்கி எரியும் காட்சி என பல காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
ஷிவாத்மிகா இதுவரை தமிழில் நடித்துள்ள படங்களில் நடிப்பு திறமையை இந்த படம்தான் முழுமையாக வெளிக்கொண்டு வந்துள்ளது. இயக்குநர் சரியாக பயன்படுத்தி உள்ளார். இமானின் பின்னணி இசையில் ஒரு லைவ் கிராமத்தை பார்த்த உணர்வு கிடைக்கிறது. ‘நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள், நாம் வழிபடும் நாட்டார் தெய்வங்களும் ஒன்று தான். இங்கே ஜாதிக்கு என்ன வேலை’ என்று கேட்கிறது பாம். சாதி ஆணவ படுகொலைகளும், தீண்டாமை பிரச்சனைகளும் இருக்கும் தமிழ்நாட்டில் இது போன்ற பாம் தேவைதான்.