‘மகாராஜா’ – விமர்சனம்
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா.இந்தப் படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இவர்கள் தவிர, மகாராஜா படத்தில் மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமூகத்தில் சரி தவறு என்று இரு விஷயத்துக்குள் உட்படாத எல்லா விதமான கதைகளையும் பேசும் சுதந்திரத்தை கலை ஊடகங்கள் நமக்கு அளிக்கின்றன. எதார்த்தத்தில் நாம் பார்க்கும் தினசரி குற்றங்களான பாலியல் வன்முறை , தீண்டாமை, போன்ற பிரச்சனைகள் அடிப்படையில் அறம் இல்லாத செயல்கள். இந்த நிகழ்வுகளை படமாக மாற்றுவதன் நோக்கம் ஆகிய எல்லாமே அதில் குற்றம் செய்தவனின் நிலையையும் பாதிக்கப்பட்டவரின் நிலையையும் மறுவிசாரணைக்கு உட்படுத்துவதற்காகத்தான்.
மாறாக வெகுஜன சினிமா அப்படியான கதைகளை சுவாரஸ்ய நோக்கத்திற்காக கற்பனையால் மிகைப்படுத்தவும் திரைக்கதை யுத்திகளையும் கையாள்கிறார்கள் வெகுஜன சினிமா இயக்குநர்கள்.
மகாராஜா படம் திறமையாக கையாளப்பட்ட ஒரு திரைக்கதை யுத்தி. ஆனால் அதன் கதை இன்னும் உண்மைக்கு நெருக்கமாக நாம் உணர்ந்திருக்க வேண்டும்.
சலூன் கடை வைத்திருப்பவர் மகாராஜா ( விஜய் சேதுபதி) பெயருக்குதான் மகாராஜா ஆனால் தனது பெயருக்கு நேர்மாறான தன்மை கொண்டவர். எந்த வகையிலும் அதிகாரத்தன்மை இல்லாத ஒரு மனிதர். ஒரு விபத்தில் தனது மனைவி இறந்துவிட தன் மகளை தனியாக வளர்த்து வருகிறார். சலூன் கடை , மகள் இது இரண்டும் தான் மகாராஜாவின் உலகம். இவர்கள் தவிர்த்து இவர்கள் வீட்டில் உயிருள்ள இன்னொரு கதாபாத்திரமாக இருப்பது லஷ்மி என்கிற இரும்பு குப்பைத் தொட்டி. அந்த விபத்தில் தனது மகளின் உயிரை காப்பாற்றியதே அந்த குப்பைத் தொட்டிதான்.
இப்படியான நிலையில் தனது குப்பைத் தொட்டியை திருடிவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார் மகாராஜா. ஒரு குப்பைத் தொட்டியை காணவில்லை என்று சொல்லும் ஒருவனை பொதுவாக இந்த உலகம் என்னவாக புரிந்துகொள்ளும் என்பதை நமக்கு தெரியும் இல்லையா. இதற்கிடையில் படத்தின் வில்லன் கதாபாத்திரமான அனுராக் கஷ்யப் அறிமுகப்படுத்தப்படுகிறார். வீடுபுகுந்து கொள்ளையடித்து கொலை செய்யும் அனுராக் கஷ்யப் தனது மனைவி அபிராமி மற்றும் மகள் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார்.
அப்படி அந்த குப்பைத் தொட்டியில் என்னதான் இருக்கிறது. அதை யார் தான் திருடுகிறார்கள். ? குப்பைத் தொட்டிக்கும் வில்லனாக வரும் அனுராக் கஷ்யப்பிற்கும் என்ன தொடர்பு. இருவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்பது அவர்கள் இருவரும் மகள்மீது பாசத்தைக் கொட்டும் தந்தைகள். மேலோட்டமாக பார்க்கும்போது மிக அபத்தமாக தோன்றக்கூடிய கதை ஒன்றுக்குப் பின் மிக உணர்ச்சிவசமான கதை ஒன்றையும் இணைத்து ஒரு கதைசொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நித்திலன் ஸ்வாமிநாதன்.
அது இல்லாதபோது ஒரு மனிதன் கிட்டத்தட்ட மிருகமாக மாறுகிறான். அதேபோல்தான் இன்னொரு படத்தின் நாயகன் குப்பைத் தொட்டியை திருடிவிட்டார்கள் என்று புகாரளிக்கும்போது நமக்கு அதை புரிந்துகொள்ள முடிகிறது.
முதல் பாதி முழுக்க தனி ஒரு கதையாக போய்க் கொண்டிருக்க இரண்டாம் பாதியில் எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் எமோஷனலான ஒரு கதையுடன் நம்மை தொடர்புபடுத்த வைக்கிறது. மகாராஜா திரைப்படம் இருவேறு உணர்வு நிலைகளை இணைக்கும் வகையிலான திரைக்கதை முறையை பயண்படுத்துகிறது. முதல் பாதியில் பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று இயக்குநர் நினைக்கிறார் . இரண்டாம் பாதியில் உணர்ச்சிவசப்பட வேண்டும் என்று நினைக்கிறார். முதல் பாதியில் இயக்குநர் நினைத்து வைத்த நகைச்சுவைத் தருணங்கள் ஒரு சில காட்சிகளைத் தவிர கொஞம் வர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் . இரண்டாம் பாதியில் கொஞ்சம் அதன் தீவிரத்தன்மையால் நம்மை கதைக்குள் இழுக்கிறார். ஆனால் இதற்காக அவர் எடுத்துக் கொண்ட மைய கதையான மிகமுக்கியமான சமூக பிரச்சனை ஒன்று இரண்டிற்கும் இடையில் ஒரு வியாபார பண்டமாக மட்டுமே மாறிவிடுகிறது என்பது படத்தின் மிகப்பெரிய பின்னடைவு.
விஜய் சேதுபதி சலூன் கடை வைத்திருப்பது படத்தில் பெரிய பங்காக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது எதுவும் இல்லை. ஒரு முக்கியமான கதை திருப்பத்திற்காக மட்டுமே அவர் முடி திருத்தும் ஒருவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறார். விஜய் சேதுபதியின் நடிப்பைத் தவிர்த்து மகாராஜா கேரக்ட்ரை தனித்துவமாக நாம் நினைவில் வைத்திருக்க எழுத்தில் போதுமான பலம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் செண்டிமெண்ட் மாதிரி இயக்குநருக்கு பாரதிராஜா செண்டிமெண்ட்போல. அதான் இரண்டே காட்சிகளில் மட்டும் வரும் ஒரு கேரக்டரை அவருக்கு கொடுத்து வைத்திருக்கிறார்.
அனுராக் கஷ்யபின் நடிப்பு வில்லனாக நம்ப வைத்தாலும், இந்த கதாபாத்திரத்தை எந்த நடிகர் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம், பி.டி வாத்தியாராக சும்மா வரும் மம்தா மோகன்தாஸ் , சில காட்சிகளில் அபிராமி என முழுமைபெறாத குறைகள். நடராஜன் நடித்திருக்கும் போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் தருணம் ஒரு நல்ல சர்ப்ரைஸாக இருக்கும்.
விஜய் சேதுபதிக்கு இது அவரது சினிமா பயணத்தில் மறக்க முடியாதாத படம்.
இந்த வருடம் தேசிய விருது இப்படத்திற்கு நிச்சயம்.